Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் (NEET UG) மறுதேர்வின் போது, பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்ட மிகப்பெரிய ஆள்மாறாட்ட மோசடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஜூன் 21 அன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த மறுதேர்வில் இவ்வாறு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளி தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின் போது இந்த மோசடி நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவ மாணவர்கள், போலி தேர்வர்கள் மற்றும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்வு மையங்களில் மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்களை இந்த கும்பல் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கைரேகை மற்றும் முக அங்கீகார முறையை முறியடித்து, உண்மையான மாணவர்களுக்கு பதிலாக 9 போலி தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  NTA எடுத்த விஸ்வரூபம்! இந்தியாவில் Telegram-க்கு திடீர் தடை – பின்னணி என்ன?

துணை காவல் கண்காணிப்பாளர் சிவம் குமார் வெளியிட்ட தகவலின்படி, இந்த மோசடிக்குப் பின்னால் பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற வைப்பதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாகவும், தேர்வுக்கு முன்பாக ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை முன்பணம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவப் படிப்பில் தகுதி பெற்ற பிறகு மீதித் தொகை வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மறுதேர்வு வினாத்தாள் டெலிகிராம் (Telegram) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்ததாக பரவிய தகவல்களை தேசிய தேர்வு முகமை (NTA) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இவை அனைத்தும் வதந்திகள் என்றும், தேர்வு முழுமையாக பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டதாகவும் NTA இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

லக்கிசராயில் நடைபெற்றது வினாத்தாள் கசிவு அல்ல; தேர்வு மையத்தில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி மட்டுமே என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து காவல்துறையினரும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  மாணவர் சக்திக்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு! 20 நாள் போராட்டத்திற்கு கிடைத்த மாஸ் வெற்றி! 
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago