தான் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு தீர்க்கமான மற்றும் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அரசியலுக்கு வருவது குறித்து அவரது தாயார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் முழு சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளதாகவும், இது தன்னுக்கு மிகுந்த உருக்கமான தருணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், “நான் அரசியலுக்கு வர தகுதி உள்ளதா? வர வேண்டுமா?” என்பதைத் தீர்மானிக்க, தனது தாய்க்கு நிகராகக் கருதும் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் சமூக வலைதளக் கருத்துகள் மூலம் கருத்துகளை கேட்டிருந்தார்.
அந்த கருத்துகள் அனைத்தையும் கவனமாக பரிசீலித்த பிறகு, மக்களின் அன்பும் ஆதரவும் தன்னுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விரைவில் தனது ரசிகர்களை பெருந்திரளாக ஒன்று சேர்த்து, தனது தாயார் முன்னிலையில் மேடையில் அதிகாரப்பூர்வமான அரசியல் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டுக்கு வந்து சந்தித்த ரசிகர்கள், திருநங்கை சகோதரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவர்களின் அன்பும் ஆதரவும் தன்னுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், கடந்த சில காலமாக அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வருவதாகவும், புதிய அரசின் செயல்பாடுகளில் சில நல்ல முன்னேற்றங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பள்ளிகள் மற்றும் கோயில்கள் அருகே இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டிருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கை எனவும் கூறியுள்ளார். புதிய அரசு என்பதால் அதன் செயல்பாடுகளுக்கு இன்னும் நேரம் வழங்கி மதிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சனங்கள் இயல்பானவை என்றாலும், எந்த கருத்தையும் முன்வைக்கும் முன் தாங்கள் செய்த பணிகளை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் பயணம் தனிப்பட்ட விருப்பங்களால் அல்லாது, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எனவும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்காக அதிகமாக செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேடை அறிவிப்பும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும், அதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
நான் உண்மையுடன் செயல்பட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே என் உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
