https://republictn.com/

தலைநகர் டெல்லியில் நீண்டகாலமாக நீடித்து வந்த குடும்பத் தகராறு மற்றும் சட்டப் போராட்டம் எதிர்பாராத திருப்பத்தை எடுத்துள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்திற்கு வந்த தம்பதியினர், இறுதியில் சமரசம் செய்து மீண்டும் இணைந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஷிகா சிங் மற்றும் சௌரப் ஆகியோருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஷிகா சிங் தனது கணவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நீண்டகால சட்டப் போராட்டம் குடும்பத்திற்கு மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஷிகாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினரிடம் போதிய பணவசதி இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த தகவலை அறிந்த கணவர் சௌரப், தங்களுக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைப் பொருட்படுத்தாமல் உடனடியாக உதவ முன்வந்தார். தனது மாமனாரை குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய அவர், சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்று அவரது உயிரைக் காப்பாற்ற உதவினார்.

கணவரின் இந்த மனிதநேயமிக்க செயல் ஷிகா சிங்கின் மனதை முற்றிலும் மாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அடுத்தகட்ட விசாரணைக்கு வந்த ஷிகா, தனது கையில் இருந்த விவாகரத்து மனுவை அனைவரின் முன்னிலையிலும் கிழித்தெறிந்தார்.

அதைத் தொடர்ந்து, கணவரை நோக்கி சென்று கட்டியணைத்த அவர், கண்ணீர் மல்க மீண்டும் அவருடன் இணைந்து வாழ முடிவு செய்தார். இந்த உணர்வுபூர்வமான தருணம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “அன்பும் மன்னிப்பும் எந்தவொரு உடைந்த உறவையும் மீண்டும் இணைக்க முடியும்” என்ற நேர்மறையான கருத்துகளுடன் இந்த வீடியோவை இணையவாசிகள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago