இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான நன்றியுணர்வு கலந்த இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் எல்லைகளைத் தாண்டி கிராமத்து மண்வாசனை மிக்க வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்ற படைப்பாளியான பாரதிராஜா, வயது மூப்பு காரணமாக ஜூன் 10, 2026 அன்று காலமானார். அவருக்கு வயது 84.
பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பல்வேறு திரைப் பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது பதிவில், “தமிழ் கிராமங்களின் காதலையும் உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டியும் பலருக்கு ஊக்கமளித்துக்கொண்டே இருக்கும். அமைதியாக இளைப்பாறுங்கள்” என்று பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், “என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ மற்றும் ‘தாஜ்மஹால்’ ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
1993ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம், கிராமிய இசையையும் குடும்ப உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதில் இடம்பெற்ற “மானூத்து மந்தையிலே”, “தாய்மாமன் சீர் கொண்டு வாராண்டி” போன்ற பாடல்கள் இன்றளவும் கிராமப்புற திருமணங்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அதேபோல், 1994ஆம் ஆண்டு வெளியான ‘கருத்தம்மா’ திரைப்படம் சமூகக் கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவானது. “போராளே பொன்னுத்தாயி” உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன.
1999ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்திலும், கிராமத்துப் பின்னணியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது மாறுபட்ட இசை வடிவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திய அளவில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை பல மொழிகளில் கோடிக்கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், அவரது இசை தென்னிந்தியாவின் தொலைதூர கிராமங்களிலும் சாதாரண மக்களிடமும் சென்று சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாரதிராஜாதான் என்பதை அவர் தனது இரங்கல் பதிவில் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
குறிப்பாக, நகர்ப்புற இசையமைப்பாளர் என்ற அடையாளத்தைத் தாண்டி, கிராமத்து மக்களும் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை உச்சரித்து, அவரது பாடல்களை தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டதற்கு பாரதிராஜாவின் திரைப்படங்களே பாலமாக அமைந்தன என்ற உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பாரதிராஜாவின் மண்வாசனை மிக்க திரைப்படங்களும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் இணைந்து உருவாக்கிய படைப்புகள் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த மைல்கற்களாக இன்றும் போற்றப்படுகின்றன. அந்த மறக்க முடியாத படைப்புப் பயணத்தையும், தன்னை மக்களிடம் கொண்டு சென்ற இயக்குநரையும் ஏ.ஆர். ரஹ்மான் தனது இரங்கல் பதிவின் மூலம் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
