ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சண்டிகரில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்திய அணி பதிவு செய்த மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களும், கே.எல். ராகுல் 100 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது சலீம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் விளையாடிய அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 112 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்பு, 2018-ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டி முழுவதும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆப்கானிஸ்தான் அணியின் 15 விக்கெட்டுகளையும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு கூட்டணியான மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
