நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
“To beard the lion in his den” என்ற ஆங்கிலப் பழமொழியைக் குறிப்பிட்டு அவர் தனது வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார். “சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வது” என்ற பொருள்படும் இந்தப் பழமொழி, ஒரு சக்திவாய்ந்த எதிரியை அவரது சொந்த மண்ணிலேயே தைரியமாகச் சவாலுக்கு உட்படுத்தி வெல்வதைக் குறிக்கிறது என அகராதி விளக்கத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நார்வே செஸ் தொடர், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனின் சொந்தக் கோட்டையாகவும் ஆதிக்கப் பகுதியாகவும் இருந்து வந்த நிலையில், அதே மண்ணில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற செய்தியை காலையில் அறிந்தபோது, “என் வாய் வியப்பில் திறந்தே நின்றது” (Jaw dropped) என ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரக்ஞானந்தா வென்றிருப்பது வெறும் கோப்பையையோ பட்டத்தையோ மட்டுமல்ல; சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அவரது “Challenger Spirit” எனப்படும் போராட்ட மனப்பான்மையே மிகப் பெரிய வெற்றி என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், பிரக்ஞானந்தாவின் இந்த அசைக்க முடியாத மனஉறுதி, அனைவரும் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும், இந்தத் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை கிளாசிக்கல் செஸ் ஆட்டங்களில் வீழ்த்திய பிரக்ஞானந்தாவின் அபார திறமையைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, அவரை “Impraggnable” (வீழ்த்த முடியாதவர்) எனப் புகழ்ந்திருந்தார்.
நார்வே செஸ் வரலாற்றிலேயே, அதன் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை 20 வயதான பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், அலிரேசா ஃபிரூஸ்ஜா, டி. குகேஷ் மற்றும் வின்சென்ட் கெய்மர் ஆகியோரை வீழ்த்தி அவர் இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் நெகிழ்ச்சியான பாராட்டுப் பதிவுக்கு பதிலளித்த பிரக்ஞானந்தா, தனது எக்ஸ் தளத்தில், “உங்களின் ஆதரவுக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார். இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று” என்று நன்றியைத் தெரிவித்துள்ளார்.
