இந்தியத் திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஆர். மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த உயரிய சிவிலியன் விருதை அவருக்கு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கலைப் பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ஆற்றிய கலைச் சேவையையும், கலைத் துறைக்கான அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து நெகிழ்ச்சியடைந்த மாதவன், “இந்த கௌரவம் எனது கற்பனைக் கனவுகளுக்கும் அப்பாற்பட்டது. இதை வெறும் விருதாக மட்டுமே பார்க்கவில்லை. வருங்காலத்திலும் ஒரு கதையாசிரியராகவும் கலைஞராகவும் எனது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பாக இதைக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான மாதவன், தற்போது பான்-இந்தியா நட்சத்திரமாகவும், ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநராகவும் உயர்ந்துள்ளார்.
அவருக்கு முன்னணி திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான தடம் பதித்துள்ள ஒரு பன்முகத் திறமையாளருக்குக் கிடைத்துள்ள இந்த பத்மஸ்ரீ விருது, தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
