https://republictn.com/

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவைப் பாராட்டியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய புடின், இந்தியா வெளிநாடுகளின் பெரும் உலக வல்லரசுகளின் கட்டளைகளை ஒருபோதும் பின்பற்றியதில்லை என்று கூறினார். மேற்கத்திய, அமெரிக்கத் தடைகளால் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தையும் புடின் முற்றிலுமாக மறுத்தார். ரஷ்யா ஒருபோதும் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், இன்றும் நிலைமை அப்படி இல்லை என்றும் புடின் குறிப்பிட்டார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ”இந்தியாவின் திறமைசாலிகள், கல்வித் தரத்தைப் பாராட்டினார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று புடின் விவரித்தார்.

இந்தியா எப்போதும் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி, வெளிப்புற அழுத்தங்களை எதிர்த்து வந்துள்ளது என்று கூறிய ரஷ்ய அதிபர், இந்தியாவின் முக்கிய சுயாட்சியைப் பாராட்டினார். தேசிய இறையாண்மை, சுதந்திரமான முடிவெடுக்கும் திறன் ஆகியவை கேள்விக்குட்படுத்த முடியாத அடிப்படைக் கொள்கைகள் என்று புதின் வலியுறுத்தினார். இந்தியா இதை எப்போதும் பின்பற்றி வந்துள்ளது.

புதின், இந்தியாவுடன் சீனாவையும் சேர்த்து அதன் முடிவெடுக்கும் திறனைப் பாராட்டினார். இயல்பாகவே, இந்தியா வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த உத்தரவுகளையும் பின்பற்றியதில்லை என்றும், சீனாவைப் பற்றியும் அதையே கூறலாம் என்றும் புதின் கூறினார். இறையாண்மை, இறையாண்மையுடன் முடிவெடுக்கும் உரிமையை கேள்விக்குட்படுத்த முடியாது” என்று கூறினார்.

இந்தியா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அதிபர், “இந்தியா தனது தொழிலாளர்களின் தரத்திற்காக, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தியர்கள் திறமையானவர்கள், படித்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள், குறிப்பாக கோடிங் துறையில், உலகளாவிய நற்பெயரைப் பெற்றுள்ளனர்” என்றார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றொரு முக்கியமான கூட்டாளி என்றும், அத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்று. இந்தியர்கள் இத்துறையில் உலகளாவிய நற்பெயரைப் பெற்று, சிறப்பான பணிகளைச் செய்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்..

ரஷ்யாவுடனான உறவுகள் குறித்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் பயனற்றவை என்று ரஷ்ய அதிபர் ஒரு நாள் முன்னதாகக் கூறியிருந்தார். மாஸ்கோவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியான இந்தியா, மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்குப் பணியாது. மாஸ்கோவுடனான ஒத்துழைப்பைக் குறைக்குமாறு இந்தியாவை வற்புறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே அவரது கருத்துக்கள் பார்க்கப்பட்டன.

புதின் பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டினார். உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்று புதின் கூறினார். பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் மாஸ்கோ உறுதியாக உள்ளது. “இரு நாடுகளுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் தற்போதைய நிலையில் ($60 பில்லியன்) இருந்து $100 பில்லியனாக அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago