தி.மு.க. அமைச்சர்கள் தள்ளாட்டத்தில் இருப்பது ஒருபுறம் என்றால், அ.தி.மு.க.வின் ‘பெரிய தலைகள்’ என்று சொல்லப்படும் முன்னாள் அமைச்சர்களும் 2026 தேர்தலில் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக அறியப்பட்டவர்களுக்கே இந்த முறை ‘தண்ணி காட்டி’ வருகின்றனர் தொகுதி மக்கள். தோல்வி பயத்தில் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. மாஜிக்கள் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர்.
காமராஜுக்கு கச்சேரி ஆரம்பம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் காமராஜின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து இருமுறை அமைச்சராக இருந்தும், தொகுதி வளர்ச்சிக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்ற ஆத்திரம் இளைஞர்கள் மத்தியில் எரிமலையாக வெடித்துள்ளது. இதுவரை முக்குலத்தோர் சமூக ஓட்டுகளை வைத்து ‘கரை’ ஏறி வந்த காமராஜுக்கு, இப்போது சசிகலாவின் ‘ரீ எண்டரி’ பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
கூடுதல் இடியாக, தி.மு.க. கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முபாரக் களமிறங்கி இருப்பதால், சிறுபான்மையின ஓட்டுகள் மொத்தமாக அவருக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்குத் தோல்வி பயத்தில் வீதி வீதியாக இறங்கிப் பிரசாரம் செய்யும் காமராஜ், ‘வைட்டமின் ப’வை வாரி இறைத்து வருகிறார். ஆனால், மக்களின் அதிருப்திக்கு முன்னால் பணம் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே.
செக் வைத்த சசிகலா – திண்டாட்டம் சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதியில் பலமுறை வென்று காட்டிய ‘திண்டுக்கல்’ சீனிவாசனுக்கு இம்முறை மரண பயம் காட்டி வருகிறார் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பெ.செந்தில்குமார். “சீனிவாசனை வீழ்த்தினால் அமைச்சர் பதவி நிச்சயம்” என அறிவாலயம் ஆஃபர் கொடுத்திருப்பதால், செந்தில்குமார் தீயாய் வேலை செய்து வருகிறார்.
அவருக்குப் போட்டியாக, முக்குலத்தோர் ஓட்டுகளைப் பிரிக்க சசிகலா தரப்பிலிருந்து ராமு தேவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். செந்தில்குமாரின் தாராளமான ‘பசை’யும், சசிகலா பிரிக்கும் ஓட்டுகளும் சேர்ந்து சீனிவாசனைப் பதம் பார்த்து வருகின்றன. தனது சுய செல்வாக்கை மட்டுமே நம்பியிருக்கும் சீனிவாசனுக்கு, இந்தக் கூட்டணி வேட்டு வைப்பது உறுதி என்கிறார்கள் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.
மணிமாறனின் ஸ்கெட்ச்- உறக்கமிழந்த உதயக்குமார்
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இம்முறை நிலைகுலைந்து போயுள்ளார். கடந்த முறை 14,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இவருக்கு எதிராக, தி.மு.க. மாவட்டச் செயலர் மணிமாறன் இம்முறை பணத்தை தண்ணீராகச் செலவழித்துக் களத்தையே மாற்றிவிட்டார். உதயக்குமார் நம்பியிருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளைப் பிரிக்க, அதே சமூகத்தைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண் வேட்பாளரை நிறுத்தி சசிகலா ‘ஷாக்’ கொடுத்துள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டத்தைத் தவிர தொகுதிக்கு எதுவும் செய்யாத உதயக்குமார் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, அவரை இம்முறை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டது.
மாஜிக்களுக்கு நேர்ந்த மரண அடி?
அ.தி.மு.க.வின் கோட்டைகளாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதிகளில் இப்போது வீசும் காற்று அக்கட்சியினருக்கே சாதகமாக இல்லை. சசிகலாவின் வேட்பாளர்கள் ஒருபுறம் ஓட்டுகளைப் பிரிக்க, தி.மு.க.வின் ‘பசை’ அரசியல் மறுபுறம் நெருக்கடி கொடுக்கிறது. ஊழல் புகார்கள் மற்றும் தொகுதிப் புறக்கணிப்பால் அதிருப்தியில் இருக்கும் மக்கள், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மாஜிக்களுக்கு ஆக்ரோஷமான ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்கக் காத்திருக்கின்றனர்.
