Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

லீமா ரோஸை மட்டும் எடப்பாடி பழனிசாமி காப்பது ஏன்..? என முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”லீமா ரோஸை மட்டும் காக்கும் எடப்பாடி பழனிசாமி ஏன்..? அதிமுகவிற்குள் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பவர் லீமா ரோஸ். ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விலகிய லீமா ரோஸ், உடனடியாக அதிமுகவில் இணைகிறார்; வந்த வேகத்திலேயே அவருக்கு மகளிர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, லால்குடி தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டும் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெறுகிறார்.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலேயே செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகிறார். கூட்டணி முடிவுகள் குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற சர்ச்சை வெடித்தது.

கட்சிப் பிளவின் போது எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணிக்கு பின்னணியில் இருந்தவர் லீமா ரோஸ்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், வேலுமணி – சண்முகம் தரப்பைச் சேர்ந்த பலரது கட்சிப் பதவிகளைச் சமரசமின்றிப் பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் பறிக்காமல் இன்னமும் பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுகிறது.

இதையும் படியுங்க  தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்... மொத்த கட்சியும் வாங்க... அழைப்பு விடுத்த விஜய்...!

லீமா ரோஸ் மீதான குற்றச்சாட்டுகள் வெறும் உட்கட்சிப் பூசலோடு நின்றுவிடாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணப்பரிமாற்ற வழக்காக உருவெடுத்து, தற்போது எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் திரிசக்தி சுந்தரராமன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் விரிவாகவே கூறியுள்ளார்.

2024-ல் இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 109 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது. அதற்கு அடுத்த சில வாரங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்ற ரயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. கேரளாவில் இயங்கும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இதனைக் கண்டுபிடித்தது.

இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின், அவரது மகள் உட்பட 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜான் பிரிட்டோ, லீமா ரோஸின் சொந்த அண்ணன் என்பதும், அவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், கடந்த வாரம் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

இதையும் படியுங்க  பாஜக கவுன்சிலர் போட்ட வழக்கு.. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு இறங்கிய பிடிவாரண்ட்!

அதேபோல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரசாத் என்பவரையும் கட்சியில் சேர்த்து, அவருக்கு மாநில ஐ.டி விங்கின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் போன்ற தேச விரோத குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் பின்னணியை விசாரிக்காமல்தான் கட்சியில் சேர்த்தீர்களா? அல்லது அவர்களின் அசுரத்தனமான பணபலத்தைப் பார்த்து மண்டியிட்டீர்களா? என்ற கேள்வி உலுக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago