Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை விமான நிலையத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய சுங்கத்துறை மற்றும் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கேரளாவைச் சேர்ந்த 27 வயது பயணி ஒருவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனியறைக்கு அழைத்து சென்று உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது சாக்லேட் டப்பாக்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 117 கிராம் உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பேங்காக்கில் இருந்து சென்னை வரை இந்த போதைப்பொருளை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று இரு நபர்கள் ஆசைவார்த்தை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த இரு நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையம் வழியாக போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுங்கத்துறை மற்றும் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago