மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுமலை அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இன்று மதியம் பெண்கள் சிலர் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.
பலத்த மழையிலிருந்து தற்காத்துக்கொள்ள அருகில் இருந்த மரத்தின் கீழ் நான்கு பெண்கள் ஒதுங்கியுள்ளனர். அந்த நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் ராமுத்தாய், வாசியம்மாள் உள்ளிட்ட மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருபெண் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த எழுமலை போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
