https://republictn.com/

2017ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 92வது வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட முடியாத சூழலில் இருந்தபோது, கட்சியில் “செயல் தலைவர்” என்ற பதவி உருவாக்கப்பட்டது. அப்போது திமுக செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், மீண்டும் “செயல் தலைவர்” பதவியை உருவாக்க வேண்டும் என சில திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய திமுக தலைவர் ஸ்டாலின் 36 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழு தற்போது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. வரும் ஜூன் 5ஆம் தேதி அந்த ஆய்வு அறிக்கை திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கனிமொழியை செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

2018ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு பின்னர், மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, செயல் தலைவர் பதவி கட்சியின் விதிகளில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் செயல் தலைவர் பதவி குறித்த விவாதம் எழுந்துள்ளதால், அந்தப் பதவி மீண்டும் உருவாக்கப்படுமா? அப்படியானால் யாருக்கு வழங்கப்படும்? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago