Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் பணியாற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காமராஜர் துறைமுகத்திலிருந்து பைப் லைன் மூலம் எரிபொருள் அத்திப்பட்டு புதுநகரிலுள்ள சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தினமும் 400-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு பில்லிங் செய்ய வேண்டிய சூழலில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேண்டீன், ஓய்வறை, கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், பலமுறை போராட்டம் நடத்தியும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

400-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படியுங்க  ஆகாஷ் கொலை வழக்கு: 28 காயங்கள்… 102 நாட்கள் போராட்டம்… சிபிசிஐடி தாக்கல் செய்த அதிரடி குற்றப்பத்திரிகை!

மேலும், உரிமையாளர்கள் பணத்தை அனுப்பிய பின்னரும், ஆன்லைன் பரிவர்த்தனையில் காலதாமதம் ஏற்படுவதால் பில்லிங் பணிகள் தாமதமாகின்றன என்றும் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 18 ரேம்புகள் செயல்பட வேண்டிய நிலையில், தற்போது 4 ரேம்புகள் மட்டுமே இயங்குவதாகவும் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், தினசரி வெறும் 500 ரூபாய் மட்டுமே கூலியாக கிடைப்பதால் கடும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதையே வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசிய ஓட்டுநர் ஒருவர்,
“நாங்கள் காலை 7 மணிக்கே லோடுக்கு வருகிறோம். ஆனால் 8 மணி, 9 மணி வரை காத்திருக்க வைக்கிறார்கள். சில குறிப்பிட்ட டீலர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எங்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கழிப்பறை, குளியலறை எந்த வசதியும் இல்லை.

இரவு முழுவதும் காத்திருந்தும் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. உள்ளே ஏதாவது உதவி கேட்டால் கூட மிகவும் அவமதிப்பாக நடத்துகிறார்கள்,” என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்க  மின்சாரம் இல்லை… ஆம்புலன்ஸ் இல்லை… மனிதாபிமானமும் இல்லை..! பிஞ்சுயிரைக் குடித்த அரசு மருத்துவமனையின் அலட்சியம்..!

மேலும், ஒரு வண்டி உள்ளே சென்றால் வெளியே வர 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. கடும் வெயிலில் வண்டியிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.

HPCL டேங்கர் லாரி ஓட்டுநர்கள் அறிவித்துள்ள இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடித்தால், பல மாவட்டங்களில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago