https://republictn.com/

தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியான மின்வெட்டு பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சாக்குப்போக்குகள் சொல்லாமல் மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்தடையின் போது போதுமான ஜெனரேட்டர் வசதி இல்லாததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் மூன்று நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகரித்த மின் தேவை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் சில இடங்களில் மட்டுமே மின்தடை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், “மின் உற்பத்தியில் எந்த தட்டுப்பாடும் இல்லை. தேவைக்கேற்ப போதுமான மின்சாரம் கையிருப்பில் உள்ளது. எங்கு கோளாறுகள் இருக்கின்றனவோ அவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்விநியோகத்தை முழுமையாக சீரமைக்க சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்” என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய ஆட்சியாளர்களின் மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகளால் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்தோம் என்ற காரணங்களை கூறாமல், மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago