https://republictn.com/

தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் மின் நுகர்வு உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுவருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை அடுத்த எண்ணூர் காசி கோயில் குப்பம் பகுதியில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மின்தடை நீடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான மின்தடை ஏற்பட்டுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடகமா சத்திரம் பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆர்.கே. பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாக்குப்பம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் முறையாக வழங்கப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலும் கடந்த 10 நாட்களாக பல மணி நேர மின்தடை நீடித்து வருவதாக முகாமில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் அத்தியாவசிய பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், முகாம் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago