தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் காவல் எல்லையில் உள்ள பல்லாவரம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை மாத இடைவெளியில் இரண்டு இரட்டை கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இதில் கானா பாடகர்கள் இருவர் உட்பட பலர் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், வரதராஜபுரம், மன்னிவாக்கம், படப்பை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சா பயன்பாட்டில் ஏற்பட்ட மோதலால் முன்பே இவர்களுக்குள் அடிதடி வழக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.
இந்த இரண்டு இரட்டை கொலை சம்பவங்கள் தொடர்பாக சிறார்கள் உள்ளிட்ட தீபக், பொட்டி சுரேஷ் ஆகிய இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முடிச்சூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சிறை சென்று வந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர், அவர் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்ததும் தாம்பரம் தனிப்படை போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து தினேஷை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டதில், பல ஆண்டுகளாக போலீசாரின் கவனத்தில் சிக்காமல் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், முடிச்சூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதோடு, தனது விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, 500 ரூபாய்க்கு கஞ்சா வாங்கினால் அதற்கு இணையாக வலி நிவாரணி மாத்திரைகளை இலவசமாக வழங்கியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
போலீசார் தினேஷிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 870 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்து, வலி நிவாரணி மாத்திரைகளை இலவசமாக வழங்கி இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியதோடு, பழிக்கு பழியாக நடந்த கொலை சம்பவங்களுக்கும் மறைமுகமாக காரணமாக இருந்ததாக கூறப்படும் இந்த கஞ்சா வியாபாரியின் கைது, தாம்பரம் சுற்றுவட்டார மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
