https://republictn.com/

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம், வண்டிக்காரர் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய வரும் முக்கிய இடமாக இருந்து வருகிறது. அதேசமயம், இது செல்வம் சுழலும் இடமாகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், இங்கு சார்பதிவாளராக பணிபுரிய பலரும் போட்டி போட்டுக்கொண்டு மேலிடத்திற்கு குறிப்பிட்ட தொகை வழங்கி பணியிடத்தை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இங்கு வரும் சிலர் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைகளில் சிக்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது இங்கு சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராமநாதன் என்பவர், தொடர்ச்சியாக போலி பட்டாக்களை பதிவு செய்து வருகிறார் என்றும், அதிக அளவில் லஞ்சம் பெறுகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவருக்கு உதவியாக அயூப் என்ற புரோக்கரும் செயல்பட்டு வருகிறார். இவர் முறையான பத்திர எழுத்தர் அல்ல என்றும், அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்ட புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (RSP) மாவட்டச் செயலாளரான சுரளிக்குமார், நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி, சார்பதிவாளர் ராமநாதன் போலி பத்திரப்பதிவில் ஈடுபடுகிறார் என்றும், அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். மேலும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் மனு அனுப்பியிருந்தார்.

அதன் அடிப்படையில், இன்று லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை 15 லட்சம் ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்ததாகவும், அதில் ஆரம்ப கட்டமாக 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 15 லட்சம் ரூபாய் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சார்பதிவாளர் ராமநாதன் மற்றும் புரோக்கர் அயூப் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகையை விட குறைவாக மதிப்பிட்டு லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிளான் அப்ரூவல் வழங்கும் அதிகாரிகளும் விசாரணையில் இணைந்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்கள் வெளியாகும் என டிஎஸ்பி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், புரோக்கர் அயூப் அலுவலகத்திலும், சார்பதிவாளர் ராமநாதனின் சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், லஞ்சத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago