கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நள்ளிரவில் மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது எக்ஸ்பக்கத்தில், ”தவெக எம்.எல்.ஏ பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, போதையில் அவர் வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்துள்ளார். எம்.எல்.ஏ தவறு செய்யவில்லை என்றால், திடீரென பெண் ஆட்சியருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி, ”இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், இந்தப்புகார்கள் குறித்து தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ”அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. என் மீதும் தவெக மீதும் உள்ள வன்மத்தால் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுப் பொய் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனக்கு அரசு அதிகாரிகள் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. தவறு எதுவும் செய்யாததால் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் ஆட்சியர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர் தரப்பில் புகார் அளித்தால், நிச்சயம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கள்ளக்குறிச்சியில் ஒரு நகைக்கடை திறப்புவிழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டும்போது நடிகை கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்துள்ள போட்டோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
”முதலமைச்சர் விஜய்க்கு மிக நெருக்கமானவங்களுக்கே ‘இந்தப் பிடி’ன்னா அப்போ மாவட்ட ஆட்சியருக்கு..?” என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
