மொத்தம் 30 தவெக எம்எல்ஏக்களை குறி வைத்து குதிரை பேரம் நடத்த இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் உளவுத்துறையும் நோட்டமிட்டு வருகிறது. தவெக தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து ஆறு மாதங்களை தொடப்போகிறது. திரும்பவும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தா தவெக ஆட்சியை பதம் பார்க்க எதிர்கட்சிகள் திட்டம் போடுவது அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம், தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்தடுத்து எம்எல்ஏக்களை குறிவைத்து நடக்கும் இந்த ‘குதிரை பேர’ முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் தீப்பந்தமாக மாறியிருக்கிறது.
குறிவைக்கப்படும் மண்டலங்கள்
குறிப்பாக மதுரை, கோவை மண்டலங்களை மையமாகக் கொண்டு தவெக எம்எல்ஏக்களை இழுக்கும் வலை விரிக்கப்படுவதாகக் காவல் துறையினருக்கு முதற்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆட்சிக்கு எதிராக மற்றொரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, தவெகவின் பலத்தை சோதிக்க எதிர்க்கட்சிகள் காய்நகர்த்துவதாக பேசப்படுகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக, பனையூர் தலைமையகத்தில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் உஷார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரம் பேச முயல்பவர்கள் குறித்த விவரங்களை உடனடியாகத் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஆளும் தரப்பு எம்எல்ஏக்களின் நடவடிக்கைகளையும் உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
குறையை மறைக்க ஆடும் நாடகமா?
இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “எளிதில் ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது. அதற்குப் பெரும்பான்மை பலம் தேவை. இது தவெகவின் அரசியல் நாடகம்” எனக்கூறியுள்ளார்.
