செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே கேட் அருகே, சோறு வடித்த கொதிக்கும் கஞ்சி நீரில் தவறி விழுந்து பலத்த தீக்காயமடைந்த பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வல்லாள வெங்கடேஸ்வரலு – அங்காளம்மா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தைலாவரம் ரயில்வே கேட் அருகே தற்காலிகமாகக் கூடாரம் அமைத்துத் தங்கி, பூம்பூம் மாடுகளை வளர்த்து, அவற்றின் மூலம் ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களது மூன்றாவது பெண் குழந்தையான 4 வயது அவந்திகா, கடந்த சனிக்கிழமை மாலை கூடாரத்திற்குள் இருந்த மடக்குக் கட்டிலில் ஏறிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கட்டில் சரிந்து விழுந்ததில், நிலைதடுமாறிய குழந்தை அருகே தரையில் வைக்கப்பட்டிருந்த சோறு வடித்த கொதிக்கும் கஞ்சி நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை (நவம்பர் 9) காலை குழந்தை அவந்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில், கொதிக்கும் கஞ்சி நீர் பாத்திரம் தரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
