Blair Tickner

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னர், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது குடும்பம் எதிர்கொண்ட எட்டு மாத காலப் போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இந்த இக்கட்டான அனுபவம் தனது வாழ்க்கையையும், கிரிக்கெட்டை அணுகும் விதத்தையும் மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிக்னரின் மனைவி சாரா, கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தொடர்ந்து எட்டு மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அப்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த டிக்னர், தனது போட்டிகளைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு நியூசிலாந்து திரும்பினார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சாரா, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு நலமுடன் உள்ளார்.

இந்தக் கடினமான காலகட்டம் தனது வாழ்க்கைப் பார்வையையே மாற்றிவிட்டதாகக் கூறியுள்ள டிக்னர், முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாடும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்ததாகவும், தற்போது விளையாட்டை மகிழ்ச்சியுடன் ரசித்து விளையாடக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  வரலாற்றில் முதல் முறை..! IPL 2026-ல் அரங்கேறிய வெறித்தனமான சம்பவங்கள்! RCB & வைபவ்வின் மிரட்டல் RECORDS!
Blair Tickner

இதுகுறித்து அவர் கூறுகையில், “முன்பெல்லாம் விளையாடும்போது அதிக அழுத்தத்தை உணர்வேன். ஆனால், இப்போது கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக ரசித்து, முகத்தில் புன்னகையுடன் விளையாடப் பழகிக்கொண்டேன். ஏனெனில், நாளின் முடிவில் எனது மனைவி சாரா மற்றும் மகள் புளோரன்ஸ் ஆகியோருடன் வீட்டுக்குத் திரும்புவதுதான் எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமானது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் டிக்னர், முதலாவது ஒருநாள் போட்டியில் தனது பேட்டிங் திறமையாலும் கவனம் ஈர்த்தார். அந்தப் போட்டியில் 11-வது வீரராகக் களமிறங்கிய அவர், அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில் அர்ஷ்தீப் சிங்கின் ஒரே ஓவரில் அவர் விளாசிய மூன்று சிக்சர்களும் அடங்கும்.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிக்னர், நகைச்சுவையாக, “பேட்டிங்கில் முதலில் 10-வது இடத்துக்கு முன்னேற வேண்டும். அதன்பிறகு படிப்படியாக மூன்றாவது இடத்துக்கும் வர ஆசைப்படுகிறேன்” என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இதையும் படியுங்க  CSK- உர்வில் படேலின் காட்டடி… 13 பந்துகளில் 50 ரன்கள்..! லைவ்வில் பார்த்து மிரண்ட கோலி..!

இதற்கிடையே, புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள சாரா, தற்போது உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். 2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கடினமான ‘ஹைராக்ஸ்’ (HYROX) உடற்தகுதிப் போட்டியில் பங்கேற்க அவர் தயாராகி வருகிறார்.

கிரிக்கெட்டைத் தாண்டி, பிளேர் டிக்னர் மற்றும் சாரா தம்பதியினர் நியூசிலாந்தின் ஹேஸ்டிங்ஸ் பகுதியில் ’13th Stag’ என்ற பெயரில் உணவகம் ஒன்றையும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

மனைவியின் புற்றுநோய் பாதிப்பு, எட்டு மாத கால மருத்துவப் போராட்டம், குடும்பத்தினரின் மன உறுதி எனப் பல சவால்களைக் கடந்து தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கும் பிளேர் டிக்னர் – சாரா தம்பதியினரின் கதை, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *