10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் 2026 தொடர் மொத்தம் 74 போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர், மே 31ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது.
இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அனுபவம் மிக்க கேப்டன்களான எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்த சாதனை நிகழ்ந்திருந்தாலும், தற்போது அன்கேப்ட் வீரரான ரஜத் படிதார் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை உயர்த்தியிருப்பது ஐபிஎல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சீசனின் பேட்டிங் சாதனைகளைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அசத்திய அவர், முழுத் தொடரிலும் அபாரமான ஆதிக்கம் செலுத்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர். இறுதிப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் ஆரஞ்சு கேப்பை வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு கேப்பை தக்க வைத்துக் கொண்டார்.
பர்பிள் கேப் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ககிசோ ரபாடா இடையே கடுமையான போட்டி நிலவியது. புவனேஷ்வர் குமார் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும், ககிசோ ரபாடா தனது விக்கெட் எண்ணிக்கையை உயர்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
அதிக ரன்கள் சேஸ் செய்யப்பட்ட போட்டியைப் பொறுத்தவரை, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் 264 ரன்கள் குவித்த நிலையில், அந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 265 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கே.எல். ராகுல் திகழ்ந்தார். அவர் 152 ரன்கள் குவித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக, 10 அணிகளிலும் குறைந்தது ஒரு வீரர் சதம் அடித்திருப்பது இந்த தொடரின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கே.எல். ராகுல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கூப்பர் கொன்னோலி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கெல்டன், திலக் வர்மா மற்றும் குவின்டன் டி காக், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபின் ஆலன் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.
அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் முன்னிலை வகித்தனர். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 72 சிக்ஸர்களுடன் ஆதிக்கம் செலுத்தினார்.
மேலும், 90 ரன்களை கடந்த பிறகு ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி மூன்று முறை இடம்பெற்றுள்ளார்.
இந்த ஐபிஎல் 2026 தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த தொடராகவே அமைந்தது. அதற்கு சான்றாக, முழுத் தொடரிலும் ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை பதிவு செய்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைச் சேர்ந்த மொஹ்சின் கான் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்த ஐபிஎல் 2026 சீசன், பல புதிய சாதனைகளையும் மறக்க முடியாத தருணங்களையும் ரசிகர்களுக்கு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடராக அமைந்துள்ளது.
