https://republictn.com/

தமிழ்நாட்டில் தங்களது அரசியல் முத்திரையைப் பதித்துள்ள தவெக, தற்போது டெல்லி அரசியலிலும் காலடி எடுத்து வைக்கத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெற்றுள்ள 107 இடங்களின் பலத்தைக் கொண்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களைப் பெறும் தகுதியை தவெக பெற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பவும், மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணவும் முதல்வர் விஜய் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதனால் தமிழ்நாட்டிற்கான ஒரு மாநிலங்களவை இடம் தற்போது காலியாகியுள்ளது.

சட்டப்பேரவையின் தற்போதைய பலத்தின் அடிப்படையில், காலியாகியுள்ள இந்த எம்பி இடத்தை தவெக மிக எளிதாகக் கைப்பற்ற முடியும். இதன் மூலம் டெல்லி நாடாளுமன்றத்திற்குள் நுழையப் போகும் தவெக-வின் முதல் முகமாக, முதல் எம்பியாக யார் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.

விஜய் கணக்கு: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை அடைய முதல்வர் விஜய் வியூகம் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தவெக சார்பாகப் பிரதிநிதி ஒருவர் இருக்கும்போது, தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், கோரிக்கைகளை நேரடியாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவைப் பேணுவதற்கும், தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முட்டுக்கட்டையின்றி எளிதாகப் பெற்றுத் தருவதற்கும் இந்த எம்பி பதவி ஒரு பாலமாக அமையும் என விஜய் நம்புகிறார்.

விஜய்யின் அடுத்த அதிரடி
மாநிலங்களவை எம்பி பதவி ஒருபுறமிருக்க, டெல்லியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களைச் சுமுகமாக முன்னெடுப்பதற்காக, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் ஆலோசனையிலும் விஜய் ஈடுபட்டுள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட இந்தத் பதவி, டெல்லி அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அடுத்த சில நாட்களில் விஜய் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்னிலையில், இந்தச் சிறப்புப் பிரதிநிதி நியமனம் தவெக அரசுக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவிக்கு நியமிக்கப்படுபவர் சாதாரணமாக இருந்துவிட முடியாது. பொதுவாக ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த ஆளுமையும், டெல்லி அதிகாரவட்டாரத்தில் நல்ல தொடர்புகளும் கொண்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

டெல்லியிலேயே தங்கியிருந்து, தமிழ்நாடு அரசு சார்ந்த திட்டங்களுக்கான கோப்புகள், நிதிகள் மத்திய அமைச்சகங்களில் எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதை அதிகாரிகளின் உதவியுடன் கண்காணிப்பது அவரது பணி. சென்னைத் தலைமைச் செயலகத்திற்கும், டெல்லிக்கும் இடையேயான நிர்வாகத் தொடர்புகளைச் சீராக மேற்பார்வையிடுவது முக்கியம். தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களோ அல்லது சட்டங்களோ மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால், அதுகுறித்து மாநில அரசுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து எச்சரிப்பதும் அவரது வேலை.

தமிழ்நாட்டைத் தாண்டி டெல்லியிலும் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட, முதல்வர் விஜய் எடுக்கப் போகும் இந்த முதல் டெல்லி விசிட், நியமனங்கள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago