https://republictn.com/

தமிழக அரசியல் களம் எப்போதும் புதுமைகளையும், அதே நேரத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதே இல்லை. ‘சினிமா பாணி’ கவர்ச்சியோடு அரசியலுக்குள் நுழைந்து, சமூக ஊடகங்களின் துணையோடு ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள தவெக-வின் செயல்பாடுகள் ஃப்ன்னான விவாதமாக மாறி வருகிறது. “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவே தவெக ஆட்சியைப் பிடித்துவிட்டது” என்று தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினே..(!?) விமர்சனம் வைத்து வரும் நிலையில் அதை அமோதிக்கும் வகையி இருக்கிறது தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள்.

‘ரூட் மாஃபியா’ டூ ரீல்ஸ் ஆட்சி வரை
விஜய் முதல்வரானதில் இருந்தே, திரை மறைவாக இருக்கும் ஒரு கார்ப்பரேட் ‘ரூட் மாஃபியா’- சோசியல் மீடியா உத்திகள் மூலமாகவே இந்த வெற்றி சாத்தியமானது என்கிற விவாதங்கள் இன்னும் ஓயவில்லை. எதார்த்த அரசியலை விட, டிஜிட்டல் உலகில் கட்டமைக்கப்பட்ட பிம்பமே தவெக-வின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

அதேவேளை, இந்த விளம்பர அரசியல் தவெக-வுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அதை ஆரம்பித்து வைத்ததே திமுக தான். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில், எங்கு சென்றாலும் கேமராமேனுடன், வீடியோ குழுவினரையும் கூடவே அழைத்துச் சென்று, சுடச் சுட பதிவேற்றி ‘விளம்பர ஆட்சி’ நடத்துகிறார் என்று இதே எதிர்க்கட்சிகளால் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டார். காலையில் நடைப்பயிற்சி செல்வது முதல் சைக்கிள் ஓட்டுவது வரை அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு நடத்தப்பட்ட அந்த பிம்ப அரசியல், ஒருகட்டத்தில் மக்களிடையே பெரும் சலிப்பை ஏற்படுத்தியது எதார்த்தமான உண்மை.

ஸ்டாலினை மிஞ்சிய தவெக-வின் விளம்பர மோகம்
மு.க.ஸ்டாலினின் விளம்பர அரசியலை மக்கள் சலிப்போடு பார்த்த நிலையில், அதைவிட இரண்டு மடங்கு வேகமாக தவெக-வினர் அதே தவறைச் செய்யத் தொடங்கியுள்ளனர். அன்று திமுக ஆட்சியில் ஸ்டாலின் மட்டுமே செய்து வந்த அரசியலை தவெக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் செய்து வருகின்றனர். சோசியல் மீடியா மூலமாகவே ஆட்சிக்கு வந்தவர்கள் என்கிற விமர்சனத்தை உடைக்க வேண்டிய தவெக எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும், தற்போது தங்களது அன்றாட அலுவல் பணிகளைக் கூட ஒரு சினிமா படப்பிடிப்பு போல மாற்றி வருகின்றனர்.

அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ தங்களது தொகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கும், வகிக்கும் பதவிக்கும் செய்ய வேண்டிய கடமை. ஆனால், தவெக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சாதாரண ஒரு தாலுகா அலுவலக விசிட், மருத்துவமனை ஆய்வு, சாலைப் பணிகளைப் பார்வையிடுதல் போன்ற மிகச் சாதாரண அலுவல் ரீதியான நிகழ்வுகளைக் கூட, ‘சினிமாத்தனமான பேக்கிரவுண்ட் மியூசிக்’ (BGM) மற்றும் ஸ்லோ-மோஷன் (Slow-motion) காட்சிகளோடு வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வெற்று விளம்பரமும்… மக்கள் சலிப்பும்…
முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள், அவசர காலப் பேரிடர் மீட்புப் பணிகள் போன்ற அத்தியாவசிய நிகழ்வுகளை அரசு தரப்பில் வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அது மக்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும். ஆனால், காலையில் அலுவலகத்திற்குள் நுழைவது, அதிகாரிகளைப் பார்த்து ஃபைல்களைப் புரட்டுவது போன்ற அன்றாடக் கடமைகளைக் கூட ‘டிரெண்டிங்’ பாடல்களைப் பின்னணியில் ஒலிக்க விட்டு விளம்பரம் தேடுவது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

தமிழக மக்கள் தவெக-விடம் எதிர்பார்ப்பது அதிரடியான, எதார்த்தமான களப் பணிகளைத் தான். அதை விடுத்து, முந்தைய ஆட்சிகளைப் போலவே கேமராக்களுக்கு முன்னால் மட்டுமே தோன்றும் ‘ரீல்ஸ் அமைச்சர்களாக’ இவர்கள் வலம் வருவது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

சோசியல் மீடியா லைக்குகளும், கமெண்ட்டுகளும் ஒருபோதும் உண்மையான மக்கள் ஆதரவாக மாறாது என்பதை தவெக உணர வேண்டிய தருணம் இது. மு.க.ஸ்டாலினின் விளம்பர அரசியல் மக்களுக்கு எப்படிச் சலிப்பை ஏற்படுத்தியதோ, அதே சலிப்பை தவெக-வின் இந்த வெற்று விளம்பர மோகமும் மிக விரைவிலேயே பொதுமக்களிடம் ஏற்படுத்திவிடும்.

திரைக்குப் பின்னால் இருக்கும் பிம்ப அரசியலைத் தாண்டி, கேமராக்கள் இல்லாத எதார்த்தக் களத்தில் தவெக அமைச்சர்கள் தங்களின் முத்திரையைப் பதிக்கத் தவறினால், இந்த ‘இன்ஸ்டாகிராம் ஆட்சி’ வெறும் 15 வினாடி ரீல்ஸாகவே முடிந்து போகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago