Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Coimbatore

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையம் செல்லும் வழியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று மதியம் சுமார் 11.40 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த அவர், அங்கு சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வு நடத்தினார். முதலமைச்சரின் இந்தத் திடீர் வருகையால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரை உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.

காவல் நிலையத்திற்குள் சென்ற முதலமைச்சர், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளரின் அறைக்குச் சென்று, அவரது இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், காவல் ஆய்வாளருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்து காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

குறிப்பாக, காவல் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து என்னென்ன புகார்கள் வருகின்றன, புகார் அளிக்கப்பட்ட பிறகு அவற்றின் மீது எவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறது, புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களைக் கேட்டார்.

இதையும் படியுங்க  காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறிய படி ஓடிய 25 வயது சொகுசு விடுதி உரிமையாளர்.. சிதைத்த 4 பேர் கொண்ட கும்பல்!
Coimbatore

தொடர்ந்து, காவல் நிலையத்தின் தினசரி நடைமுறைகள், பதிவேடுகள் (Station Registers), வழக்குக் கோப்புகள் மற்றும் காவல் நிலையக் கையேடு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்தில் உள்ள லாக்-அப் எனப்படும் சிறை அறை, அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தின் அன்றாடப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, காவலர்களின் பணிச்சூழல், வேலைப்பளு, அடிப்படைத் தேவைகள், குறைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். காவல் நிலையங்களுக்கான அன்றாடச் செலவினங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்படும் நிதி, கூடுதலாக ஏற்படும் செலவுகள், பாதுகாப்புப் பணிகளுக்கான வாகன வசதிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, உயர் காவல் அதிகாரிகளான அன்பு ஐபிஎஸ், மேற்கு மண்டல ஐஜியும் கோவை மாநகரப் பொறுப்பு காவல் ஆணையருமான ரம்யா பாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு உயர் அதிகாரிகளும், காவல் ஆய்வாளரும் விளக்கமளித்தனர்.

இதையும் படியுங்க  அது யாரோட ’அம்மா’..? ஒரே கேள்வியில் ஒட்டுமொத்த போலீஸையும் ஆட வைத்த ஆ.ராசா..!

காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மாறி மாறி விளக்கமளிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. காவலர்களுடன் முதலமைச்சர் சிரித்துப் பேசியபடி கலந்துரையாடிய காட்சிகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், காவல்துறையினர் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Coimbatore

காவல் நிலையங்கள் சுதந்திரமாகவும், பொறுப்புடனும் செயல்படுவதுடன், பொதுமக்களின் புகார்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பிரிவில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 26 ஆயிரம் தொழில்முனைவோருக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படியுங்க  வேலைக்கும் வேட்டு வச்சாச்சு! அதிர்ச்சியில் கிராமப்புற மக்கள்! தமிழகத்திற்குப் பேரிடியை இறக்கிய மத்திய அரசு!

அந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் நோக்கிச் சாலை மார்க்கமாகச் சென்றபோதுதான் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். செல்லும் வழியில் திரண்டிருந்த பொதுமக்களின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக முதலமைச்சர் விஜய் காவல் நிலையங்கள் மற்றும் சிறைத்துறை தொடர்பான இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருவது கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டத்திற்கு வந்திருந்த அவர், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குத் திடீரெனச் சென்று காவல் ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவல்துறையினருடன் கலந்துரையாடியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காவல்துறையின் அன்றாடச் செயல்பாடுகள், காவலர்களின் தேவைகள், பணிச்சூழல், காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்த இந்த ஆய்வு, கோவை மாவட்டத்திலும் தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago