தமிழக அரசியல் களம் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தால் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது எழுந்த குற்றச்சாட்டு, இன்றுவரை அவருக்கு பெரும் தலைவலியாகவே நீடித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, தற்போது தமிழக அரசுக்கு அதிரடியான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே பல்வேறு சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு அரசு அதிகாரி அல்லது அமைச்சர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்க வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதி கட்டாயம் என்பது விதிமுறையாகும். கடந்த காலங்களில் இந்த அனுமதி வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்திருந்தன.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள புதிய கடிதத்தில், செந்தில் பாலாஜியை விசாரிக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
முன்னதாக மே 15ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதம், மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என கூறி ஆளுநர் மாளிகையால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை வெறும் கடிதம் மட்டுமின்றி, ஒரு பென் டிரைவையும் இணைத்து அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. அதில் விசாரணை தொடர்பான ரகசிய குறிப்புகள், ஆதாரங்கள் மற்றும் புகார் ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமைச் செயலாளர் அலுவலகம் இந்த கடிதத்தை பெற்றதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
தற்போது செந்தில் பாலாஜி திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்த விசாரணைக்கு அனுமதி வழங்குமா அல்லது முந்தைய அரசைப் போலவே காலதாமதம் செய்யுமா என்பது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக உள்ளது.
ஊழலுக்கு எதிராக தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள முதல்வர் விஜய்க்கு இந்த விவகாரம் ஒரு பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை அரசியல் வட்டாரம் உற்றுநோக்கி வருகிறது.
