தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்
கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டியது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக இரண்டு முக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே வலுவாக முன்வைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பதால், இவருக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக விளங்கும் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் பெயரும் இந்த அமைச்சரவைப் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் இவரது தேர்வு அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அரசியல் முக்கியத்துவம்
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த சில ஆண்டுகளாககூட்டணி ஆட்சிக்கான கோரிக்கைகள் வலுத்து வந்தாலும், அது நடைமுறைக்கு வராமலேயே இருந்து வந்தது. தவெக தனது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அதிகாரப் பகிர்வு அளித்திருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டு ஆட்சி கலாச்சாரத்திற்கு வழி வகுத்துள்ளது.
இந்த அதிகாரப் பகிர்வு தவெக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியை அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் காங்கிரஸ்- தவெகவின் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்த அமைச்சரவை விரிவாக்கம் பெரிதும் உதவும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
