முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ₹634 கோடி நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் குற்றச்சாட்டில், சின்னத்திரை நடிகைகளின் பெயர் அடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த ஜனனி அசோக்குமார்?
சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு முன்னணி நடிகை தான் ஜனனி அசோக்குமார். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், ‘மாப்பிள்ளை’, ‘செம்பருத்தி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘இதயம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். நடிப்பைத் தாண்டி, மாடலிங், சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர் மற்றும் தொழில்முனைவோர் எனப் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் இவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
₹634 கோடி முறைகேட்டில் சின்னத்திரை நடிகைகள்
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 2,500-க்கும் மேற்பட்ட பணியிட நியமன முறைகேடுகள், சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது ஆதரவாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்கில் தான், தற்போது சின்னத்திரை நடிகைகளான ஜனனி அசோக்குமார், அவரது நெருங்கிய தோழியான ‘செம்பருத்தி’ சீரியல் புகழ் ஷபானா ஆகியோரின் பெயர்கள் பலத்த சர்ச்சையுடன் அடிபடத் தொடங்கியுள்ளன.

பரபரப்பு குற்றச்சாட்டுகள்
கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர்களான கவிபிரசாத் – செல்வமணி ஆகியோர் மூலமாக, ஊழல் கமிஷன் பணம் கமிஷன் அடிப்படையில் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கிருந்து அந்தப் பணம் வேறு பல பினாமி கணக்குகளுக்குக் கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈசிஆர்-ல் கொட்டிக்கிடக்கும் முதலீடுகள்
சென்னை மாநகராட்சி டெண்டர்கள், பணி நியமன முறைகேடுகள் மூலம் வந்த கோடி கணக்கிலான கமிஷன் பணத்தை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள துணிக்கடைகள், ஸ்வீட் கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பல வணிக நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து, அதன் மூலம் பெரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நடிகைகளின் வங்கிக் கணக்குகளில் திடீரென நிகழ்ந்துள்ள சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், அமலாக்கத்துறையும் முழுமையாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த ₹634 கோடி முறைகேட்டுப் பணத்தின் இறுதிப் புள்ளி யார் என்பதை அறிய இவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியலையும், சின்னத்திரையையும் ஒரே நேரத்தில் உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் சோதனைகளை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். இப்படி,சின்னத்திரை நடிகைகளின் பெயர்கள் ரூ.634 கோடி ஊழல் புகாருடன் இணைத்துப் பேசப்படுவது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உண்மை இருக்கிறதா? வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டால் மேலும் யார் யாருடைய பெயர்கள் வெளிவரும்? என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
