தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தில்லியில் போராட்டங்களை ஒடுக்குவதுபோலவே, தமிழ்நாட்டிலும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தவெக அரசு ஒடுக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவகாரத்தில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியும், அவர் பதவி விலகக் கோரியும், தேர்தல் நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு எதிராகவும் தில்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. தில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டங்களின்போது, அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டின் சேப்பாக்கம் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினரையும் தமிழகக் காவல்துறை கைது செய்தது. இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள கனிமொழி, “டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக; தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!” என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். போராட்டங்களைக் கையாள்வதில் மத்திய பாஜக அரசுக்கும் தமிழக தவெக அரசுக்கும் வேறுபாடு இல்லை என்பதே அவரது விமர்சனத்தின் சாராம்சமாகும்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை, கடந்த சில நாட்களாகக் கனிமொழி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 500-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சமூக வலைத்தள ரீல்ஸ்கள் மற்றும் போலியான பரப்புரைகளை மட்டுமே நம்பிச் செயல்படும் “போலி அரசாங்கம்” என்றும் தவெக அரசை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி (GST) வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து மாநிலம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் தவெக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் விவசாயிகள் மற்றும் செவிலியர்களைக் கைது செய்வதாகவும் அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு தவெக அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் கனிமொழி விமர்சித்திருந்தார். பொதுமக்களின் உடல்நலப் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தவெக வேட்பாளர்களை அறிவித்த விதம் மற்றும் வாக்காளர்களைக் கையாளும் முறை குறித்தும் கனிமொழி அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தச் சூழலில், தவெக அரசையும் மத்திய பாஜக அரசையும் ஒப்பிட்டு அவர் முன்வைத்துள்ள விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
