திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பில் வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற வழக்குகளைவிட இந்த வழக்கு எ.வ.வேலுவுக்குச் சவாலாக அமையக்கூடும் என திமுக வட்டாரங்களிலேயே பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கான திடலைச் சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மணப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 20 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மண் எடுக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவே எ.வ.வேலுவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்குத் தடை கோரிய மனு நிராகரிப்பு
இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி, எ.வ.வேலு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில், குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதேவேளையில், அன்பில் மகேஷ் தொடர்பான வழக்குகளில் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எ.வ.வேலுவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், சட்டவிரோத மண் எடுப்பு தொடர்பான வழக்கில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதனால், இந்த வழக்கு விசாரணை அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏரியில் ஏற்பட்ட பள்ளங்கள் குறித்து ஆய்வு!
மணப்பம்பாடி ஏரியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 23 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மண் எடுக்கப்பட்ட இடங்களில் பெரிய பள்ளங்கள் இருப்பதைப் பொதுப்பணித் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மண் எடுக்கப்பட்ட பரப்பளவு, அதன் ஆழம், அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த ஆதாரங்கள் விசாரணையில் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன என்பதும், அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
