மேகம் தொட்டுப் போகும் உயரத்தில் ஒரு கிராமம். பெயர் நெக்னாமலை. திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடியிலிருந்து வானம் நோக்கி நீளும் அந்த மலை உச்சியில், 150 குடும்பங்கள்… 500-க்கும் மேற்பட்ட ஜீவன்கள். வசிக்கின்றனர் சுதந்திர இந்தியாவுக்கு வயது 78. ஆனால், இந்த மக்களுக்கு சாலை என்ற சுதந்திரம் மட்டும் 60 ஆண்டுகளாக எட்டாக்கனியாகவே இருக்கிறது.இங்கே யாரும் மருத்துவமனையில் பிறப்பதில்லை. இறப்பதுமில்ல பிறப்பும் ,இறப்பும் நடப்பது, மலையில் இருந்து மழைநீர் வழிந்தோடும் அந்தக் கணவாய்ப் பாதையில்தான்…
டோலி என்ற துணித் தொட்டிலில்தான்!பிரசவ வலி எடுத்தாலும் சரி, நெஞ்சுவலி வந்தாலும் சரி… இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆம்புலன்ஸ், மூங்கில் கழியும், கிழிந்த துணியும் தான். நோயாளியைத் துணியில் கிடத்தி, கழியில் கட்டி, தோளில் சுமந்து மலையிறங்க வேண்டும். தவறி கால் இடறினால், பள்ளத்தாக்குதான்!

உதாரணமாக 2019 -கோவையில் மின்சாரம் தாக்கி இறந்துபோனார் 25 வயது முனிசாமி. அவரது உடல் ஆம்புலன்சில் மலையடிவாரம் வரைதான் வர முடிந்தது. அதற்கு மேல் 1,500 மீட்டர் உச்சிக்கு சாலை இல்லை. அன்று நள்ளிரவில், தீப்பந்த வெளிச்சத்தில், டோலி கட்டி அவரது சடலத்தைச் சுமந்து சென்றனர் உறவினர்கள். இன்னோரு கொடுமை என்ன தெரியுமா? முனிசாமியின் மனைவி அனிதாவுக்கு வயது 22. நிறைமாத கர்ப்பிணி .கணவனின் இறப்பை கேட்டு கதறி கிழே இறங்கிவரை சடலத்தோடு டோலியில் வைத்துத் தூக்கிச் சென்றனர் அந்த மலைமகள் ,

சமீபத்தில் கோவிந்தன் என்ற அந்த மனிதர், உடல்நலம் சரியில்லாமல் 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்தே வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை வாசலில் மயங்கி விழுந்து உயிரைவிட்டார். அன்று நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தில், கரடுமுரடான பாதையில் அவரது உடலை 7 கி.மீ தூரம் டோலி கட்டித் தூக்கிச் சென்றனர். உயிரோடு இறங்கியவன், பிணமாக ஏறினான்
பிரசவ வலியால் துடித்த ஒரு தாய்… இருசக்கர வாகனம் கூட போக முடியாத அளவுக்கு மண்சாலை அரிப்படைந்து கிடப்பதால். சுமார் 8 கிலோமீட்டர் டோலியில் தூக்கி வந்து வள்ளிப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் முதல் தொட்டில், டோலிதான்!
இந்தச் செய்திகள் வந்தபோதெல்லாம் தமிழகமே கண்ணீர் விட்டது. 2024 ஆம் ஆண்டு ராஜக்கிளி என்ற கர்ப்பிணியை ஒரு இரவில் தீப்பந்தங்களுடன் தூக்கி வருவதைக் ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்ட நடிகர் பாலா அடுத்த வாரமே ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். “பணம் இருந்திருந்தால் சாலையே போட்டுக் கொடுத்திருப்பேன்” என்று கதறினார். அன்று ஏறிய அந்த ஆம்புலன்ஸ் இப்ப வரை மலை உச்சியிலே நிற்கிறது கடந்த ஆட்சியில் ஸ்டாலின் உத்தரவால், மாவட்ட ஆட்சியர் 8 கி.மீ நடந்து சென்று ஆய்வு செய்து தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கினார் அப்போது வனத்துறை சட்டங்களை பாஜக அரசு புதியதாக திருத்திய காரணத்தால் மலை கிராம சாலைகளுக்கு சாலை அமைப்பதில் சிக்கல் உருவாகியாதல் மத்திய அரசு ஒப்புதல் இல்லை” என்ற ஒற்றை அறிக்கையோடு கோப்பு மூடப்பட்டது.

இதனால் நெக்னாமலை சாலை வசதி பெற முடியாத சூழலில் இன்றும் தொடர்கிறது கடந்த பொங்கலுக்கு அரசு நிவாரணம் கழுதைகளில் ஏற்றி அனுப்பப்பட்டதைப் பார்த்து தமிழகமே அதிர்ந்தது. ஆனால், எதுவும் மாறவில்லை.”சாலை இல்லாததால் எங்க ஊருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டேங்கிறாங்க சார்…” என்கிறார்கள், உடைந்த குரலில். நெக்னாமலை கிராம மக்கள்
அவ்வப்போது மக்களே ஒன்று சேர்ந்து 5 கி.மீ மண்சாலை போடுகிறார்கள். ஒரு மழை… ஒரே ஒரு கனமழை போதும், அதை அடித்துக்கொண்டு போக !அப்படி அடித்துக்கொண்டு போன கரடுமுரடான சாலையில் வந்த காளியப்பன் வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தற்போது பெய்துவரும் கனமழையால் முற்றிலும் சேதமடைந்த மண்சாலையில் மீண்டும் மருத்துவமனைக்குப் போக முடியாமல் நேற்று செப்டம்பர் 30-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
நெக்னாமலை மக்களின் பிறப்பும் டோலியில்தான் அவர்களின் வாழ்க்கையும் அதே டோலியில்தான் முடிகிறது, மலை உச்சியிலிருந்து ஒரே கோரஷாக குரல் மட்டும் காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது… “எங்களுக்கு சாலை போட்டுத் தாருங்கள்… உயிர் பிழைக்க சாலை போட்டுத் தாருங்கள்!” …
