திமுகவின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாகவும், கட்சியின் ‘இரண்டாம் கட்ட தலைமை’ அந்தஸ்தைக் கொண்டதாகவும் விளங்குவது பொதுச்செயலாளர் பதவி. மறைந்த க. அன்பழகன் தசாப்தங்களாக வகித்து வந்த இந்தப் பொறுப்பை, அவரின் மறைவுக்குப் பின் துரைமுருகன் ஏற்று நடத்தி வருகிறார்.
தற்போது துரைமுருகனின் மூப்பு, உடல்நலக் குறைவு மற்றும் உட்கட்சி மாற்றங்கள் காரணமாக, அப்பதவிக்கான அடுத்தகட்ட வாரிசுப் போட்டி அறிவாலய வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
இப்போது திமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் பெரிய ரேஸ் நடந்து வருகிறது. இதுவரை 3 பேருக்குள் நடந்து வந்த பொதுச்செயலாளருக்கான போட்டி இப்போது திமுகவின் பல பவர் சென்டர்கள் மூலமாக பல பேருக்குள்ள நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

திமுக பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய துரைமுருகன் வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாக அந்த பதவியில் இருந்து விலகப் போவது உறுதியான நிலையில் அந்த பதவிக்கு ஏழு, எட்டு பேர் போட்டியில் இருக்கிறார்கள்.
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ வேலு, ஐ.பெரியசாமி, சிவசங்கர் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
டி.ஆர். பாலு கட்சியின் பொருளாளராகவும், ஸ்டாலினுக்கு நெருக்கமான மூத்த தலைவராகவும் இருக்கும் இவர் மீது டெல்லி அரசியல், தேசியக் கூட்டணி நிர்வாகத்தில் தலைமைக்கு அதீத நம்பிக்கை உண்டு. தென் – மத்திய மாவட்டங்களில் வலுவான உள்ளூர் தளத்தைக் காட்டிலும் டெல்லி அளவிலான தொடர்புகளிலேயே அதிகம் அறியப்படுகிறார்.

எ.வ.வேலு கட்சி அமைப்புகளைக் கையாளுவதிலும், தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு நடத்துவதிலும் ‘களப் பணியாளராக’த் திகழ்பவர். சீனியாரிட்டி வரிசையில் டி.ஆர். பாலு, ஐ. பெரியசாமி போன்றவர்களுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறார்.
ஐ. பெரியசாமி தென் தமிழகத்தில் கட்சியின் அசைக்க முடியாத தூணாக இருக்கும் இவர், சமூக மற்றும் மூப்பு அடிப்படையில் தமக்கு இந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். உடல்நிலை மற்றும் மண்டல ரீதியான அரசியல் கணக்குகள் இவருக்கு சாதகமாக இல்லை.
ஆ. ராசா திராவிட கருத்தியல் ரீதியாகவும், பட்டியலின சமூகப் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் இவருக்கு வாய்ப்பளித்தால் அது கட்சிக்குக் கொள்கை ரீதியான பலத்தைத் தரும் என்ற கருத்து உள்ளது.
மத்திய மாவட்டக் கட்டுப்பாட்டைக் தக்கவைக்கவும், செயல்வேகத்தை அதிகரிக்கவும் எஸ்.எஸ். சிவசங்கர் கே.என். நேரு இருவரது பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் உலவுகின்றன.

திமுக சார்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான தேர்தல் செலவை பார்த்துக் கொண்ட எ.வ.வேலு அந்த பதவியை எதிர்பார்க்க ஐ.பெரியசாமி தரப்பும் சீனியாரிட்டி அடிப்படையில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஸ்டாலின் மனதில் டி.ஆர்.பாலுதான் இருக்கிறாராம். ஆனால், எ.வ.வேலுவின் நேரடி கட்டுப்பாட்டில் சுமார் 20 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எ.வ.வேலு சொல்வதுதான் வேதவாக்கு என்பதால் இந்த லாஜிக்லையும் அறிவாலயம் வேலுவின் பொதுச்செயலாளர் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த உடனே திமுகவில் இந்த பதவி பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.
