Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தலை ஒட்டி மிகவும் விறுவிறுப்படைந்துள்ளது. தவெக, அதிமுக, திமுக, பாமக, விசிக என அனைத்துக் கட்சிகளின் பார்வையும் இந்தத் தேர்தலின் மீதே பதிந்துள்ளது.

மதுராந்தகத்தில் சாதிய வாக்கு வங்கி
இந்நிலையில் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம் கூறுகையில், ”மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் வாக்குகளும், பட்டியல் இன (தலித்) வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.

தவெக பக்கம் வன்னியர் வாக்குகள் பெரிதாகச் சாயும் எனத் தெரியவில்லை. பாமக தொண்டர்கள் அமைதியாக அதிமுக பக்கம் சாய வாய்ப்புள்ளது. ‘தவெக-வை வளரவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் பாமகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்’ என்ற பயம் வன்னிய சமூகத்தினரிடையே நிலவுகிறது.

Vijay

விசிக – பட்டியல் இன வாக்குகள்
தவெக ஒரு ‘புரோ தலித்’ பிம்பத்தைக் கொண்டுள்ளதாக விசிக தொண்டர்கள் கருதுகின்றனர். தவெக அதிவேகமாக வளர்ந்தால் தங்கள் கட்சியின் செல்வாக்கு பாதிக்கும் என்பதால், விசிக தொண்டர்களும் அமைதி காக்கின்றனர்.

இதையும் படியுங்க  தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாதா? மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு எப்போது?

“நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் பிரேரணை கொடுத்தோம், ஆனால் அவர்கள் ஏற்கவில்லை” என்று பாமகவின் சௌமியா அன்புமணி கூறிய கருத்து குறித்துப் பேசிய தராசு ஷ்யாம், “அரசியலில் எந்தவொரு பெரிய கட்சியும் பொது வேட்பாளர் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளாது; அது பேச்சுவார்த்தை அளவிற்குக்கூடச் சென்றிருக்காது” என்று தெளிவுபடுத்தினார்.

வடிவேல் ராவணனின் மகள் புறக்கணிப்பு
கடந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற்ற தவெக வேட்பாளர் வடிவேல் ராவணனின் மகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவருக்குரிய மரியாதையோ, சமாதானமோ செய்யப்படாததால் அந்த 5,000 முதல் 10,000 வாக்குகள் தவெகவுக்கு விழாமல் போவதற்குக் வாய்ப்புள்ளது.

அதிமுகவுக்குச் சாதகமாகும் சூழல்?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்குப் பல சாதகமான அம்சங்கள் இருக்கிறது.
அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சமீபத்தில் தான் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நிற்கிறார்.

Republic Tamil

விஜய் தனது பிரச்சாரங்களில் திமுகவை மட்டுமே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துகிறார். அதிமுகவைப் பற்றிப் பெரிதாக விமர்சிக்காதது, மறைமுகமாக அதிமுகவுக்கே லாபமாக முடிகிறது.

இதையும் படியுங்க  "திமுக ஆட்சியில் உதயநிதி பண்ணின பிசினஸ் என்ன தெரியுமா..?" – மேடையில் வெடித்த ஆதவ் அர்ஜுனா!

அதிமுகவை உடைக்கத் திட்டமிடும் விஜய்?
மாற்றுக்கட்சிகளில் இருந்தும், குறிப்பாக அதிமுகவில் இருந்தும் விலகி தவெகவில் இணையும் நிர்வாகிகளுக்கு சரமாரியாக ‘துணைப் பொதுச்செயலாளர்’ போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சோ நடித்த முகமது பின் துக்ளக் படத்தில் “எல்லோரும் துறை இல்லாத உதவி பிரதமர்கள் ” என்று சொல்வது போல, தவெகவிலும் அனைவருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன.

உண்மையான தொண்டர்களின் அதிருப்தி
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே தீவிரமாக உழைத்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுக்கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த நினைத்து, சொந்தக் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தும் தவறான வியூகமாக இது மாறக்கூடும்.

விஜய்யின் முரண்பாடான பிரச்சாரம்
விஜய் தனது மேடைகளில் “பாஜகவும் திமுகவும் ஒன்றுதான்” எனக் கூறி பிரச்சாரம் செய்கிறார். பாஜக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தேடிச் சென்று கேட்டவர் விஜய் தான்.

தாராபுரம் போன்ற தொகுதிகளில் பாஜகவுக்கு என்று தனியாக 7,000 முதல் 10,000 வாக்குகள் உள்ளன. விஜய் பாஜகவைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலம், அந்த எதிர்ப்பு வாக்குகளை தவெக பக்கம் திருப்ப நினைக்கிறார் . ஆனால், தவெகவின் அடிப்படை வாக்கு வங்கியே 23% என்ற அளவில் இருக்கும்போது, இந்த வியூகம் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்பது சந்தேகமே.

இதையும் படியுங்க  ''பறிபோகும் இடங்கள்..! உரிமையை விட்டுக் கொடுக்காதே..!'' முதல்வர் விஜய்க்கு உதயநிதி அதிரடி எச்சரிக்கை!"
Vijay

அரசியல் ஆலோசகர்களின் தவறு
விஜய் களத்தில் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே ‘தீய சக்தி’ என்று இலக்கு வைக்கிறார். ஆனால், இடைத்தேர்தல் களம் முற்றிலும் வேறுபட்டது. அதிமுகவின் ‘எம்.ஜி.ஆர் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்’ என்று விஜய் சொல்வது நடைமுறை அரசியலுக்குச் சரியாக வராது.

அரசியல் அனுபவம் இல்லாத விஜய்க்கு அவரது ஆலோசகர்கள் வகுத்துத் தரும் இந்தத் தவறான வியூகங்களால், தவெக இத்தேர்தலில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார் ‘தராசு’ ஷ்யாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago