தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவனமான வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ரூ.1 கோடி மாமூல் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜாவை தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி பிஎன்டி காலனியைச் சேர்ந்த இசக்கி ராஜா, கடந்த 2023-ம் ஆண்டு ஜின் பேக்டரி சாலையில் இயங்கி வரும் வேலவன் நகைக்கடையில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்து ஐந்து பவுன் தங்கச் சங்கிலி வாங்கியதாக கூறப்படுகிறது. குடும்பத் தேவைக்காக அந்த நகையை கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தூத்துக்குடியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர நகைச் சோதனையின்போது, செப்டம்பர் 29-ம் தேதி நகை ஆய்வாளர்கள் அந்தச் சங்கிலியைச் சோதனை செய்துள்ளனர். அப்போது நகையில் கலப்படம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு,
இதுகுறித்து இசக்கி ராஜாவுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகை வாங்கியதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலவன் நகைக்கடைக்குச் சென்று அவர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வேலவன் நகைக்கடை நிறுவனத்தினரும் அந்த நகையைச் சோதனை செய்ததாகவும், வழக்கமாக தங்க நகைகளில் சேர்க்கப்படும் சில உலோகங்களின் அளவு சற்று அதிகமாக இருப்பது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக அந்த நகையை மாற்றித் தருவதாக நிறுவனத்தினர் தெரிவித்ததாகவும், ஆனால் இசக்கி ராஜா நகையை எடுத்துச் சென்றதுடன், வேலவன் நிறுவனம் கலப்படம் கலந்த போலியான தங்க நகைகளை விற்பனை செய்வதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் தகவல்களைப் பரப்பியதாகவும் நிறுவனத் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனத்திடம் இசக்கி ராஜா தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், முதற்கட்டமாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் பெற்றுக்கொண்ட பின்னரும், மேலும் ரூ.1 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தென்பாகம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், வேலவன் நிறுவனத்தைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பி, பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் விடுப்பதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் திரண்டு மனு அளித்தனர். இந்தப் புகார்கள் அளிக்கப்பட்ட மறுநாளே, இன்று அதிகாலை காவல் துறையினர் இசக்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இசக்கி ராஜாவை காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு நகர விடாமல் தடுத்ததால் வீட்டின் முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரது கைது தகவல் பரவியதும், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிடத் திரண்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் இசக்கி ராஜாவை ஆஜர்படுத்த அழைத்து வந்தபோதும் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைக் கலைக்க காவல் துறையினர் லத்தி அடி நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இசக்கி ராஜாவை வரும் அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய நியாய சன்ஹிதா எனப்படும் BNS சட்டப்பிரிவு 308(4)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி ராஜா, வேலவன் நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற மற்றும் போலியான நகைகளை விற்பனை செய்வதாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தார்.
அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்காமல், நகைக்கடை உரிமையாளர் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் பழிவாங்கும் நோக்கில் தன்னை கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இசக்கி ராஜா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விடுவிக்கக் கோரி பசும்பொன் மக்கள் தேசம் கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று மதியம் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதும் காவல் வாகனத்தை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மாறுபட்ட கருத்துகளும் வெளியாகி வருகின்றன. ஒரு தரப்பினர், போலி அல்லது கலப்பட நகை விற்பனை குறித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரையே கைது செய்வது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறப்படும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பது அவசியம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு புறம் நகையின் தரம் தொடர்பான குற்றச்சாட்டும், மறுபுறம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் புகாரும் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
