உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் நிஷாத் பாத்திமா (26). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது சாத் (28) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து முகமதுவுடனான காதலை முறித்துக் கொண்ட பாத்திமா அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த முகமது சாத் நேற்று காலை 11.30 மணியளவில் பாத்திமா பணியாற்றும் பள்ளிக்குச் சென்றுள்ளார். தனியாகப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாத்திமாவும் வகுப்பறையிலிருந்து வெளியேறி அவருடன் பள்ளி மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, முகமது சாத் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பாத்திமாவை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பாத்திமா இறந்ததை உறுதி செய்த முகமது சாத், உடனே அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
