மதுராந்தகம் தொகுதியில் வன்னியர்கள், தலித்துகள் வாக்குகள், தாராபுரத்தில் கொங்கு கவுண்டர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கிற சக்தியாக இருக்கின்றன.
திமுக கூட்டணியில்தேமுதிக, கொமதேக, மநீம இருக்கின்றன. தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சிகள் உள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தாலும் இந்த இடைத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன.

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த பாமக இந்த இடைத்தேர்தல்களில், “எந்த கட்சிக்குமே ஆதரவு இல்லை” என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகையில், “2024-க்கு முன் 13 வருடங்களாக பொதுவாகவே இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதுதான் பாமகவின் நிலைப்பாடாக இருந்தது. 2010 பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கி 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை பெரும்பாலான இடைத்தேர்தல்களில் பாமக போட்டியிடாமல்தான் இருந்தது. 2024-ல்தான் அந்த நிலைப்பாட்டை மாற்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டோம்.
சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில்தான் இருந்தோம். ஆனால் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமி, சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு எங்களுடன் எதுவுமே பேசவில்லை. எங்களை அழைத்து கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உட்பட எதைப் பற்றியும் பேசவும் இல்லை. எடப்பாடி தான் நினைப்பதை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என நினைக்கிறார். அது சரிதான்.. அது அவருடைய அதிமுக கட்சிக்குள்தானே பொருந்தும். கூட்டணி கட்சிகளும் அப்படியே இருக்க வேண்டும் என என்ன அவசியம் இருக்கிறது? இப்போது இடைத்தேர்தல் வந்த உடன்தான் அதிமுக தரப்பில் பேசுகிறார்கள்.

அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க வேண்டாம். அடுத்து நாடாளுமன்ற தேர்தல்- உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் வருகிறது. அந்த தேர்தல்களுக்கு தயாராவோம். அப்போது யாருடன் கூட்டணி என சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்வோம் என்கிற நிலைப்பாட்டில்தான் அன்புமணி இருக்கிறார். அதனால் இப்போது பொதுவாகவே இருக்க முடிவெடுத்து இருக்கிறோம்” என்கிறார்கள்.
அதே நேரத்தில் ”திமுக- தவெக- அதிமுக தரப்பில் பாமககிட்ட பேசினார்களா என கேட்டபோது, ”எல்லா கட்சியில் இருந்தும் எங்களிடம் பேசினார்கள். எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டதை பற்றியும் ஆலோசனை நடத்தினோம். திமுகவைப் பொறுத்தவரை, “சட்டசபை தேர்தலின் போதே கூட்டணிக்கு பேசினோம்.. ஆனால் அப்போது எங்களுடன் விசிக இருந்ததால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இப்போது விசிக ஆளும் தவெக பக்கம் போய்விட்டது. நீங்கள் வாங்க.. நாம கூட்டணியா தொடர்ந்து பயணிக்கலாம்” என அழைத்தார்கள்.
அதிமுகவும், ”சட்டசபை தேர்தல் போலவே கூட்டணியில் தொடர்வோம்” என அழைத்தார்கள். தவெக தரப்பில் பேசும் போது, “எங்களுடன் விசிக இருப்பதால் எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வரமுடியவில்லை. இருந்தாலும் இந்த இடைத்தேர்தல்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். போகப் போக நாம் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொன்னார்கள். இருந்தாலும் நாங்கள் இப்போதைக்கு யாருக்குமே ஆதரவு இல்லை என்கிற முடிவெடுத்திருக்கிறோம்” என்கிறார்கள்.

”அதிமுகவில எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “பாமகவோட இந்த முடிவு எங்களுக்கு ரொம்பவே அப்செட்தான். சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் உட்பட வட தமிழ்நாட்டுல அதிமுக கணிசமான இடங்களில் ஜெயிக்க பாமக ஓட்டுகளும் ஒரு காரணம்தான்.. நாங்க இல்லைன்னு சொல்லலை.. இப்ப ஆளும் கட்சி தவெக சொல்லிதான் யாருக்குமே ஆதரவு இல்லைன்னு பாமக முடிவெடுத்திருக்குன்னு நினைக்கிறோம்.
ஏன்னா, 2024 நாடாளுமன்றதேர்தலில்போது எங்க கூட கூட்டணிக்கு பாமக ரெடியாகி இருந்தது. நாங்களும் பேசி முடிச்சுட்டோம்.. அப்ப ஆளும் கட்சி திமுக. திமுகவோட சபரீசன் அன்புமணிகிட்ட பேசினார். பாமகவும் அதிமுகவும் கூட்டணி அமைச்சா வட தமிழ்நாட்டுல திமுகவுக்கு சவாலாக இருக்கும். அதனால நீங்க பாஜக பக்கம் போங்கன்னு அன்புமணிகிட்ட சபரீசன் சொன்னார். இன்னொரு பக்கம் பாஜகவும் பாமகவை நெருக்குச்சு. அதனால பாஜக கூட்டணிக்கு போயிருச்சு பாமக. இப்பவும் ஆளும் தவெக கொடுத்த நெருக்கடியால்தான் பாமக இந்த முடிவை எடுத்திருக்கும்னு நினைக்கிறோம்” என்கிறார்கள் அதிமுகவினர்.
“மதுராந்தகம் தொகுதியில கணிசமான ஓட்டுகளை வெச்சிருக்கிற விசிக, தவெக கூட்டணியில இருக்குது. தவெகவுடன் விசிக இருப்பதால் நிச்சயம் பாமக ஓட்டுகள் அந்த கூட்டணிக்கு போகாது. அதிமுக கூட்டணியில இருந்து பாமக விலகி நின்று யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற முடிவு எடுத்திருக்கு.. இது எங்களுக்கு சாதகமா இருக்கும்” என நம்பிக்கையோடு இருக்கிறார்கள் திமுகவினர்.

ஆனால் தவெக தரப்பினரோ “இடைத்தேர்தலில் பாமக ஆதரவை கேட்டு நாங்க பேசுனது உண்மைதான். பாமகவைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சிங்கிற அடிப்படையில் அதிமுக செயல்பாடுகளை விரும்பவில்லை. அந்த பக்கம் வன்னியர் உள் இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்புன்னு எல்லா விஷயத்திலேயும் திமுக தங்களுக்கு ஆதரவா இல்லையே என்கிற கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட எல்லா விஷயத்திலும் பாமகவின் கோரிக்கைகளுக்கு தவெக ஆதரவு இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் யாருக்குமே ஆதரவு இல்லை என அன்புமணி சொல்லி இருந்தாலும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் நிச்சயம் தவெகவுக்குதான் பாமக ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.
