கர்நாடக இசையுலகின் மாபெரும் சகாப்தமாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ‘ஜெர்சி’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த், பன்னிவாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான செப்டம்பர் 16, 2026 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ள இந்த விழா, எம்.எஸ். சுப்புலட்சுமி பல வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சேரிகளை நிகழ்த்திய அதே இடத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய இசையின் ஆன்மாவாகக் கருதப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனும் எம்.எஸ். சுப்புலட்சுமி, 16 செப்டம்பர் 1916 அன்று மதுரையில் பிறந்தார். இவரது செல்லப் பெயர் ‘குஞ்சம்மா’. அவரது தாயார் சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக் கலைஞராக இருந்ததால், சிறு வயதிலேயே எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இசை ஞானம் இயல்பாகவே அமைந்தது.
தனது 11-வது வயதிலேயே திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் முதல் பொது மேடை கச்சேரியை அரங்கேற்றினார். இசைக் கச்சேரிகளில் மட்டுமின்றி, தனது ஆரம்பகாலத்தில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘சேவாசதனம்’ (1938), ‘சகுந்தலை’, ‘சாவித்திரி’ மற்றும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்திய ‘மீரா’ (1945) உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நாடு தழுவிய புகழைத் தேடித்தந்தன.
பிரபல சுதந்திரப் போராட்ட வீரரும், ‘கல்கி’ இதழின் நிறுவனர்களில் ஒருவருமான டி. சதாசிவத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி திருமணம் செய்துகொண்டார். 1966-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாடிய முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். அவரது வெங்கடேச சுப்ரபாதம் மற்றும் பஜனைப் பாடல்கள் இன்றளவும் உலகெங்கும் ஒலித்து வருகின்றன.
இசை உலகில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திய எம்.எஸ். சுப்புலட்சுமி, 11 டிசம்பர் 2004 அன்று தனது 88-வது வயதில் சென்னையில் காலமானார். மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து இன்றும் மக்களின் மனதில் வாழும் அவரது தெய்வீகக் குரலையும், சாதனைகளையும் மீண்டும் வெள்ளித்திரையில் காண்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கும், இசைப் பிரியர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு கிளாசிக்கல் பயோபிக் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு ‘M.S. – A Legacy On Screen’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செப்டம்பர் 16-ம் தேதி மாலை 5.15 மணிக்கு வெளியாக உள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்த அறிவிப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் ‘ராமாயணா’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்ததால், கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னரே இந்த வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவிடம் சென்றது. சாய் பல்லவிக்கு அடுத்தபடியாக, ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ருக்மிணி வசந்தின் பெயரும் இந்த முக்கிய கதாபாத்திரத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த பான்-இந்தியா வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுள்ளது.
ராஷ்மிகா மந்தனா இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, அவரது ஹைதராபாத் இல்லத்தில் வைத்து மிகவும் ரகசியமாக லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாரம்பரிய தோற்றத்துக்கும், புன்னகைக்கும் ராஷ்மிகா பொருந்துகிறாரா என்பதை உறுதி செய்த பின்னரே படக்குழு அவரை முறைப்படி ஒப்பந்தம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டை மையமாகக் கொண்ட ‘ஜெர்சி’ திரைப்படத்தில் எமோஷனல் காட்சிகளை மிக நேர்த்தியாகக் கையாண்ட இயக்குநர் கவுதம் தின்னனூரி, இந்த பயோபிக் படத்திற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமான வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, திரைக்கதையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16 அன்று சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் பிரம்மாண்டமான தொடக்க விழாவில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தைப் போற்றும் வகையில் ‘இந்தியன் சோரல் என்செம்பிள்’ குழுவினர் அவரது புகழ்பெற்ற சில கர்நாடக இசைப் பாடல்களை மேடையில் பாடி சிறப்பு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
“சில புனைவுகள் காலத்தைக் கடந்து வாழ்பவை… சில கதைகள் சரியான தருணத்திற்காகக் காத்திருக்கின்றன. இந்தப் பயணம் தொடங்குவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை” என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு கமர்ஷியல் நடிகையாக அறியப்படும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடக இசையின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்திற்காகத் தன்னை எவ்வாறு தயார்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என இந்திய அளவில் இப்படம் பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டு வெளியாக உள்ளது.
