உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் றே்கொள்ளப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான செப்டம்பர் 16ம் தேதி புதன்கிழமை அன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை வரை 50 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பேருந்துகள் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.
அதன்படி, கோவையில் இருந்து 30, திருப்பூர் 30, ராமநாதபுரம் 30. அருப்புக்கோட்டை25, சிவகாசி 30, ராஜபாளையம் 30, விருதுநகர் 10, தேனி 30, திண்டுக்கல் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், மதுரை மாநகரப் பகுதியில், திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 285 சிறப்பு பேருந்துகள் போக்குவரத்துத் துறையின் சார்பில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
