நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பிரபல பழக்காட்சி இந்த ஆண்டு மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 30-க்கும் மேற்பட்ட வகைகளில் சுமார் 4.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவை அனைத்தும் வண்ணமயமான பூக்களுடன் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.
சால்வியா, ஆண்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், டெல்பினியம், லேடி லேஸ், காஸ்மஸ், வின்கா, ஜினியா உள்ளிட்ட பல்வேறு மலர் வகைகள் பூங்கா முழுவதும் அலங்கரித்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை தாயகமாகக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 125-க்கும் அதிகமான நாற்று வகைகள் இம்முறை நடவு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு நடைபெறும் பழக்காட்சியில் பழங்களைக் கொண்டு “ஜுராசிக் பார்க்” தீம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
