சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் குறைவான தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் ஆபாசமான உடை மற்றும் பேச்சுக்கள், பதிவுகள் வெளியிடப்படுவதாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், திருச்சி சாதனா உள்ளிட்ட சிலர் பல்வேறு ஐ.டி.க்கள் மூலமாக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 12 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதனிடையே, இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி சாதனா தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளபடி செய்யப்பட்டது. இதனையடுத்து திருச்சி சாதனாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் பரிந்துரையின் பேரில் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத திருச்சி சாதனா தான் செய்தது தவறு என்று கதறி வருகிறார்.
