தருமபுரியில் இன்று நடைபெற்ற விசிக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தான் பகிரங்கமாகக் கேட்டதாகத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு திமுகதான் முழுப் பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுறை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தை திமுக குறைத்து மதிப்பிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், “கூட்டணிக் கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை? திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதற்காகப் போராடினோம். ஆனால், கூட்டணியைக் காப்பாற்றிக் கொள்ள திமுக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “விசிகவில் இருந்தபோது ஆதவ் என்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறினார். எனக்குப் பதவி ஆசை இருந்திருந்தால், ஆதவ் முன்வைத்த திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கலாமே” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
அதேபோல், “திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால், பிற கூட்டணிக் கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது” என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தவெக பிரசாரத்தின்போது விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது தாமதமாக வந்ததாலும், அவரைக் காண அதிகளவில் கூட்டம் திரண்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, “கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நான் கேட்டேன். ஆனால், விஜய் மீது திமுக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்குக் காரணமான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் இதுவரை காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகச் சாடிய திருமாவளவன், “எதற்காக விஜய் மீது பரந்த மனதோடு நடந்துகொண்டீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை. ஆனால், இன்று எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தவெகவுக்கு எதிரான அரசியலை திமுக ஏன் செய்யவில்லை? அதிமுக, பாஜகவின் ஆதரவை விஜய் கேட்கவில்லை; விசிக, காங்கிரஸின் ஆதரவைத்தான் கேட்டார்” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்டபோது, திமுகவைத் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் அவர் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் தனக்கு முதலில் ஏற்பட்டதாகவும் திருமாவளவன் கூறினார். “அதிமுக ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள் என்று விஜய்யிடம் நான் கூறினேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இடம்பெற வேண்டும் என்று நான் கோரினேன். எனது கோரிக்கையை முதலமைச்சர் விஜய் உடனே ஏற்றுக்கொண்டார்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமண விழாவில் பேசியபோதும், செய்தியாளர் சந்திப்பின்போதும் திருமாவளவன் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகள் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தான் முன்பு கேட்டதாகவும், ஆனால் இதுவரை காவல்துறை ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் எழுப்பியுள்ள கேள்வி, திமுக–விசிக உறவு, தவெக மீதான அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை என்றும், தற்போது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் திருமாவளவன் கூறியிருப்பது, அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் திடீர் மாற்றம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
