தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக முதல்வர் விஜய் இங்கிலாந்து புறப்படுகிறார். இங்கிலாந்து பயணத்தின் போது, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார் பந்தயத் தொடரில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நடிகர் அஜித்குமார் களம் இறங்கும் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் தமிழ்நாட்டை நோக்கிப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் விஜய் இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக லண்டன் புறப்படுகிறார். வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயணத்தின் போது, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் வரலாற்றுச் சந்திப்புபிரிட்டனின் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன்’ மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ சர்வதேசக் கார் பந்தயத்தில் ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் சார்பில் நடிகர் அஜித் குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பந்தயத்தை அதிகாரப்பூர்வமாகக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். போட்டியில் பங்கேற்கும் அஜித் குமார் உள்ளிட்ட சர்வதேசப் போட்டியாளர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்துகிறார். உலகத்தரம் வாய்ந்த சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிடுகிறார். ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் பயணம்சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைப் பாராட்டி நடிகர் அஜித் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், லண்டன் சில்வர்ஸ்டோன் ரேசிங் தளத்தை முதல்வர் நேரில் ஆய்வு செய்வதும், அங்கு அஜித்தின் பந்தயத்தைத் தொடங்கி வைப்பதும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. திரைத்துறையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரங்களாகவும், ரசிகர்களால் கொண்டாடும் நாயகர்களாகவும் வலம் வந்த விஜய்யும் அஜித்தும், தற்போது அரசியல் தலைவர் மற்றும் சர்வதேச பந்தய வீரர் என்ற புதிய பரிமாணங்களில் இங்கிலாந்து மண்ணில் இணைவது இருதரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.
