புதுச்சேரி முதல்வராக ரங்கசாமியுடன் அமைச்சர்கள் பதவியேற்பு விழா மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டு, தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணைநிலை ஆளுநரின் செயலை கண்டித்தும் புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி காமராஜர் சதுக்கம் அருகே ஒன்று திரண்ட தமிழ் உரிமை இயக்கத்தினர், அதன் தலைவர் பாவாணன் தலைமையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி நேரு வீதி வழியாக கருப்புக் கொடி ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இதனை அடுத்து அவர்களை பெரிய கடை காவல் நிலையம் அருகே போலீசார் தடுப்பு கட்டை அமைத்து தடுத்தனர். தொடர்ந்து தமிழ் உரிமை இயக்கத்தினர், தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடியபடி அங்கேயே துணைநிலை ஆளுநரின் உருவப் படத்தை கிழித்து எறிந்தும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ”புதுச்சேரியில் நடைபெறும் எந்த அரசு விழாவாக இருந்தாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் இசைக்கப்பட வேண்டும். தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டால் மீண்டும் ஒரு மொழி போர் உருவாகும்” என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
-பி.சக்திவேல். சிறப்பு நிருபர், புதுச்சேரி
