முதலமைச்சரின் அலுவலகமே விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் கண்ட்ரோலில்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என கோட்டை வட்டாரங்களில் தகவல். இந்த நிலையில்தான் முதலமைச்சரோட ஆபீஸ் மட்டுமில்லாமல் சட்டமன்றத்திலும், சபாநாயகர் தலையில் கை வைத்து அப்செட் ஆகிற அளவுக்கு சில அமைச்சர்கள் அவையில் ஆடுகிற அந்த ஆட்டத்தை பற்றி முதல்வருக்கு லிஸ்ட் போயிருக்கிறது.
உடனே ஜான் ஆரோக்கியசாமியை கூப்பிட்ட விஜய் ”என்ன நடக்குது அங்க? நாம என்ன பேசணும்னு பிளான் பண்றோமோ அதை விட்டுட்டு அமைச்சர்கள் அங்க என்னென்னவோ பேசி விவாதத்தையே திசை திருப்புறாங்க?” என அமைதியாக ஆனால் அழுத்தமாக சில அறிவுறுத்தல்களை சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் இவர்கள் இருவரும் அவையில் பேசுகிற பேச்சுகளை கவனித்த விஜய், சபாநாயகரே முகம் சுளித்த விஷயத்தை கேட்டு ரொம்ப கடுப்பாகி இருக்கிறார்.

உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாபை நேரில் வரவைத்த விஜய், ”தம்பி நம்ம என்ன நோக்கத்துக்காக அங்க
உட்கார்ந்துருக்கோம் என்பதை மறந்துடாதீங்க. எதிர்கட்சிகள் ஏதோ பேசுது என நீங்களும் ஆவேசப்பட்டு அவையை கலைத்தால் எப்படி? சபாநாயகரே வருத்தப்படுற அளவுக்கு பேசுறது நமக்கு நல்லா இல்ல. கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா” என முகத்தில் அடித்த மாதிரி நேருக்கு நேரா வார்னிங் கொடுத்தாராம்.
அப்புறம் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் அதே வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் போதாது என சட்ட அமைச்சர் நிர்மல் குமார் மீது இன்னொரு விவகாரமும் முதலமைச்சர் காதுக்கு கொண்டு போகப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாநில அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாண்டிங் கவுன்சில் எனச் சொல்லப்படும் வழக்கறிஞர்களை நியமிப்பார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவதற்காக மாநில அரசோட ஸ்டாண்டிங் கவுன்சிலிங் வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், இவர்களுக்கான ஏஓஆர் நெறிமுறைகளை இன்னும் ஒழுங்காக செய்யவில்லை. அதாவது இந்த வழக்குகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் தான் போக வேண்டும். இவர்தான் வக்காலத்து பேப்பரை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற முறையைத்தான் ஏஓஆர் எனச் சொல்வார்கள். இந்த முறையை சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் இன்னும் சரியாக செய்து முடிக்காமல் விட்டிருக்கிறார். இதனால் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வழக்கில் கூப்பிட்டால் உடனே நான் வாதாடுகிறேன். இல்ல இல்ல நான் வாதாடுகிறேன் என மூன்று வழக்கறிஞர்களும் ஒரே நேரத்தில் போய் நிற்கிறார்கள். இதை பார்த்துவிட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ”என்ன நடக்குது இங்க?இந்த கேஸுக்கு இன்னார்தான் வாதாடனும் கூட அவங்க அரசாங்கத்துல இன்னும் முடிவு பண்ணாம வச்சிருக்கீங்க?” என கடுப்பாகி அப்செட் ஆகி இருக்கிறார்கள்.

டெல்லியில் நம் மாநில அரசாங்கத்துக்கு இப்படி ஒரு அவமானம் நடக்கறபோது அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சட்டமன்றத்தில் யாராவது பேசினால் குறுக்கே புகுந்து பஞ்சாயத்து செய்வதே சட்ட அமைச்சர் நிர்மல் குமாரின் வேலையாக இருக்கிறது என சிஎம் விஜய் வரைக்கும் சென்றுள்ளது அந்த விவகாரம். அதனால் நிர்மல் குமார் டிபார்ட்மெண்ட் வேலையை ஒழுங்கா பார்க்கிறதை விட்டுவிட்டு ”சட்டமனறத்தில் என்ன அலப்பற பண்ணிட்டு இருக்கீங்க..? என அவரை கூப்பிட்டு வைத்து விஜய் டோஸ் விட போகிறார் என நமக்கு வந்த சோர்ஸ்கள் கூறுகின்றன.
