Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

எஃப் கியூஎல் என்ற ஆன்லைன் செயலி மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் பெறுவதற்காக, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மூன்று இடங்களில் காவல்துறை சார்பில் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஃப் கியூஎல் டிரேட்வெல் என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் USDT முதலீடு செய்தால், 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், கணிசமான லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மேலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை-மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு வரை சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி சிவகுமார் தெரிவித்த நிலையில், போராட்டம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "போன் சுவிட்ச் ஆஃப்.. ஆபீஸ் பூட்டு.. நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த மணலி மக்கள்: மின்வாரிய அலட்சியத்தால் வெடித்த போராட்டம்!

நேற்று கட்டம்பட்டி கிராமத்தில் எஃப் கியூஎல் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டதாகக் கூறப்படும் ரஞ்சித் என்பவரது வீட்டை, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சூறையாடியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி, ஐயாப்பட்டி, பல்லாளப்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ரெட்டியப்பட்டி, வத்திப்பட்டி, இளம்பட்டி, புதுப்பட்டி, பட்டணம்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை மையமாகக் கொண்டு நடைபெற்ற நியோமேக்ஸ் மோசடி சம்பவத்தில் பல ஆயிரம் பேர் ஏமாற்றப்பட்ட நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய நியோமேக்ஸ் மோசடி தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது எஃப் கியூஎல் மோசடி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படியுங்க  சிறுமியின் கடைசி நிமிடங்கள்… வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

நேற்று ஒரே இடத்தில் மட்டும் சுமார் 2,000 புகார் மனுக்கள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தற்போது மூன்று இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளிப்பதற்காக முகாம்களில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதிகளில் காவல்துறையினர் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago