வாணியம்பாடி நகராட்சி என்றாலே ஒரு காலத்தில் தமிழ்நாட்டுக்கே முன்மாதிரி. சுத்தம், திட்டமிடல், சேவை என்று பெயர் வாங்கிய நகராட்சி அது. ஆனால் இன்றைய வாணியம்பாடியைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. குடிக்க தண்ணீர் வரவில்லை, சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை, நடக்க ஒழுங்கான சாலை இல்லை, நிம்மதியாக தூங்க கொசுக்கடி இல்லாத ஒரு இரவு கூட இல்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.
இந்தக் குமுறலின் உச்சக்கட்ட வெடிப்புதான் நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அரங்கேறியது.
நகர மன்றத் தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், “56 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன” என்று காகிதத்தில் எழுதிக்கொண்டார்கள். ஆனால் அந்தக் காகித தீர்மானங்கள் காற்றில் பறக்க, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மட்டும் தெருவில் அப்படியே கிடக்கிறது என்று உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து சரமாரியாகப் பொங்கி எழுந்தபோது, அரங்கமே அதிர்ந்தது.
“பாலம் இடிந்து விழுந்து உயிர் போனால் யார் பதில் சொல்வீங்க?”
முதல் குண்டைப் போட்டார் 17-வது வார்டு உறுப்பினர் பி.முஹம்மது அனீஸ்.

“சி.எல்.சாலையையும் கச்சேரி சாலையையும் இணைக்கும் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து, எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மழை பெய்தால் போதும்… பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. பள்ளிக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அதைக் கடக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புதிய பாலம் கட்ட வேண்டும் என்று இதே மன்றத்தில் தீர்மானம் போட்டோம். அந்தத் தீர்மானம் இன்னும் கோப்பிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறது. அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நாளைக்கே பாலம் இடிந்து யாராவது செத்தால், இந்த நகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்!” என்று அவர் காட்டமாகச் சாடியபோது, அரங்கில் சலசலப்பு எழுந்தது.
அத்துடன் நிற்கவில்லை அனீஸ். அடுக்கடுக்காகப் புகார்களை அள்ளி வீசினார். “நகராட்சி அலுவலகம் அருகிலேயே இருக்கும் நெய்வாசல் அப்துல் வஹாப் சிறுவர் – மகளிர் பூங்கா, இரண்டு முறை திறப்பு விழா கண்டும் இன்னும் முழுமை பெறாமல் பாழடைந்து கிடக்கிறது. திறப்பு விழாவுக்கு மட்டும் அதிகாரிகள் வெள்ளை சட்டை போட்டு வந்தார்கள், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள், போய்விட்டார்கள். அதோடு சரி!
பல கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் பேருந்து நிலையம் பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதையாவது திருமண மண்டபமாக மாற்றி நகராட்சிக்கு வருமானம் பாருங்கள். வார்டு முழுக்க கல்வெட்டு, கால்வாய் எல்லாம் உடைந்து கிடக்கிறது. கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகிறது. மக்கள் கேள்வி கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

“கமிஷனர் ஆபீஸ்ல உட்கார்ந்து என்னதான் செய்றார்?” அடுத்து எழுந்த 3-வது வார்டு உறுப்பினர் சையத் ஹபீப் தங்கல், குடிநீர் பிரச்சினையைப் போட்டு உடைத்தார்.
“என் வார்டில் குடிநீர் சரிவர வருவதே இல்லை. குழாயைத் திறந்தால் காற்றுதான் வருகிறது. அதே நேரம் கால்வாயில் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தி மையமாகக் கிடக்கிறது. குப்பைகளை அள்ளவே அள்ளுவதில்லை. தெருவெல்லாம் குப்பை மேடு. சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில் இருக்கிறது. தொற்று நோய் பரவினால் யார் பொறுப்பு? கமிஷனர் ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு என்னதான் செய்கிறார்?” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
5 மெஷின் இருந்தும் 8 மாதமாக மருந்து இல்லை… அதிர வைத்த அம்பலம்! கூட்டத்தின் உச்சக்கட்ட திருப்புமுனையாக அமைந்தது 25-வது வார்டு உறுப்பினர் நாசீர் கான்-இன் பேச்சு. ஆணையாளரின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்கினார்.

“பண்டிகை காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மழையும் விடாமல் பெய்கிறது. சி.எல்.சாலை தரைப்பாலத்தின் இருபுறமும் கைப்பிடிச் சுவர் கூட இல்லை. இரவு நேரத்தில் யாராவது தவறி விழுந்து உயிரை விட்டால், இந்த நகராட்சிதான் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
அதைவிடக் கொடுமை… நகராட்சியிடம் கொசு மருந்து அடிக்க 5 இயந்திரங்கள் இருக்கின்றன. ஆனால் கடந்த 8 மாதங்களாக ஒரு தெருவில் கூட மருந்து அடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா வந்து மக்கள் செத்தால், இந்த அதிகாரிகள் அவரவர் வீட்டிலிருந்து மருந்து கொண்டு வந்து அடிப்பார்களா?
முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்கள் முன்பும், சனிக்கிழமைகளில் கோயில்கள் முன்பும், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்கள் முன்பும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான அந்த நல்ல பழக்கத்தையும் இந்த நிர்வாகம் நிறுத்திவிட்டது. இது அலட்சியத்தின் உச்சம் இல்லையா?” என்று அவர் ஆவேசமாகக் கேட்டபோது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். அரங்கமே அதிர்ந்தது.
தலைவருக்கு ஒரு அறிவுரை!
கூட்டம் முழுக்க உறுப்பினர்கள் கொந்தளித்தபோதும், நகர்மன்றத் தலைவர் உமா சிவாஜிகணேசன் வழக்கம்போல் “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற ஒற்றை வரியில் கூட்டத்தை முடித்து வைத்தார். அதைக் கேட்டு உறுப்பினர்கள் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.
“தலைவர் பதவி என்பது மாலை மரியாதைக்கான சிம்மாசனம் அல்ல; மக்களின் குறைகளைத் தீர்க்கும் பொறுப்பு நாற்காலி” என்கிறார்கள் மூத்த உறுப்பினர்கள். “56 தீர்மானங்கள் போட்டோம் என்று கணக்கு காட்டுவதை விட, ஒரு தீர்மானத்தையாவது தெருவில் நிறைவேற்றிக் காட்டுங்கள். அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் அவர்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் தலைமைக்கு வேண்டும். இல்லையென்றால், மன்றம் கூடுவதும், தீர்மானம் போடுவதும் வெறும் சடங்காகிவிடும்” என்பதே அவர்களின் ஆதங்கம்.
56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் தெருவில் இறங்கிப் பார்த்தால், ஒரு தீர்மானம் கூட உயிர் பெறவில்லை என்பதே வாணியம்பாடி மக்களின் குமுறலாக இருக்கிறது. காகிதத்தில் நிறைவேறும் தீர்மானங்கள் எப்போது தரையில் இறங்கும்? காத்திருக்கிறது வாணியம்பாடி!
