https://republictn.com/

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம், தி.மு.க-வின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைத்துள்ளது. தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களாகவும், அடிமட்டத் தொண்டர்களைக் கட்சியோடு பிணைக்கும் சங்கிலியாகவும் விளங்கும் ‘ஒன்றியச் செயலாளர்கள்’ கொத்துக்கொத்தாகத் த.வெ.க-வில் ஐக்கியமாகி வருவது அறிவாலய வட்டாரத்தை நடுங்க வைத்துள்ளது.

தி.மு.க உட்கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்கள் களப்பணியாற்றி வரும் நிலையில், தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒரே மாதத்தில் மட்டும் அவர்களில் 113 பேர் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் அடிநாதமாக, கிராமப்புற வாக்கு வங்கிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் முக்கியப் பிரதிநிதிகளே இப்படிப் போட்டி முகாமிற்கு நகரத் தொடங்கியிருப்பது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைப் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இப்படியே போனால் கட்சியின் வாக்கு வங்கியும், உள்ளூர் அளவிலான செல்வாக்கும் முற்றிலும் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ஸ்டாலின், “இனி ஒரு விக்கெட்டைக்கூட இழக்கக் கூடாது” என்பதில் தீவிரமாக உள்ளார். கட்சித் தாவலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், அதிருப்தியில் இருக்கும் உள்ளூர் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தவும் அவர் அதிரடி முடிவுகளைக் கையில் எடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ஜூன் மாதத்தின் இந்தச் சூழலில் கட்சியின் அவசரப் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில், கட்சித் தாவல் தடுப்பு நடவடிக்கைகள், மாவட்டங்கள் பிரிப்பு, மற்றும் அதிருப்தி நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்குவது குறித்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. த.வெ.க-வின் எழுச்சியால் தி.மு.க கோட்டை பலவீனமடைந்து வருவதைத் தடுக்க, அறிவாலயம் எடுக்கப்போகும் ‘கவுண்டர் அட்டாக்’ வியூகங்கள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago