தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி, திங்கள்கிழமை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
மதுரையில் தமிழக அரசின் புதிய திட்டமான “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுள்ள குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சுமார் 1.28 லட்சம் கைக்குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நிகழ்ச்சிக்குப் பிறகு, புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வழிபாடு நடத்த உள்ளார்.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, இந்த ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அவருக்கு கோயில் பிரசாதங்களை வழங்கியிருந்தார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, மதுரை மாநகரம் மற்றும் கோயில் வளாகப் பகுதிகளில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வரின் வருகையை ஒட்டி, அவர் செல்லவிருக்கும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை (GRH) வளாகங்கள் மற்றும் கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள், சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும், மதுரை விமான நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சினிமா நட்சத்திரமாக மதுரையில் பலமுறை பிரம்மாண்டமான ரசிகர் கூட்டத்தைச் சந்தித்த விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மதுரைக்குச் செல்லும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
இதனால், மதுரை மாவட்ட தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இப்போதே திருவிழா போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, முதல்வர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “நூற்றாண்டுகள் கடந்து தமிழ் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலையின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்…” எனக் குறிப்பிட்டு, நமது பண்டைய கோயில்களைப் போற்றிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார்.
செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக, அவருடைய பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களிலேயே முதல்வர் விஜய் நேரடியாக மதுரைக்குச் சென்று தரிசனம் செய்ய முடிவெடுத்திருப்பது ஆன்மிக வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
செப்டம்பர் 17-ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து, மீனாட்சியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சுபநாட்களிலேயே முதல்வர் விஜயின் தரிசனமும் அமையவுள்ளது.
