2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தமிழக அரசியல் களம் இப்போது ‘ரிப்போர்ட்’ அரசியலால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு 200 தொகுதிகள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்த திமுக தலைமைக்கு, தேர்தலுக்குப் பிந்தைய கள நிலவரங்கள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தலுக்கு முன் மிகவும் நம்பிக்கையாக இருந்த திமுக, இப்போது “ஆட்சியைப் பிடித்தாலே போதும்” என்கிற எதார்த்தமான மனநிலைக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முணுமுணுக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பூத் ஏஜெண்டுகள் பகுதி வாரியாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், திமுக கூட்டணி 134 இடங்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்டுள்ள மிக ரகசியமான ரிப்போர்ட்டில், திமுக 122 இடங்களில் தனித்தே வெற்றி பெற்று மெஜாரிட்டி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாம். இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருந்தது.

விஜய்க்குச் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில், அவர் மிகச் சொற்பமான வாக்குகளில் தோல்வியடைவார் என்று திமுக பூத் ஏஜெண்டுகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அதேபோல், திருச்சி கிழக்குத் தொகுதியில் 5,000 முதல் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றியைத் தவறவிடுவார் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது.

ஒரு பக்கம் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்தாலும், மேஜிக் நம்பரைத் தாண்டி கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறது. இதன் எதிரொலியாக, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அறிவாலயத்தில் கூட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. முதல்வரைச் சந்திக்க வரும் நிர்வாகிகள் பலர், அடுத்த அமைச்சரவையில் இடம் கேட்டு இப்போதே காய்நகர்த்தத் தொடங்கியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் முக்கியப் புள்ளிகளால் முதல்வரைச் சுற்றியுள்ள சூழல் பரபரப்பாகவே காணப்படுகிறது.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விடச் சற்று கூடுதலான இடங்களில் வென்று, மீண்டும் அரியணையில் அமரப்போகிறோம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்க, மக்களின் தீர்ப்பு மே 4-ம் தேதி வெளிவரும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடிக்கவே செய்யும்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *